வெளிநாடு | சமூக வாழ்வு | 2023-02-07 14:31:45

துருக்கி நிலநடுக்கம்: பிரபல கால்பந்து வீரர் மாயம்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு மாயமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப். இங்கு நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின்போது துருக்கியின் பல பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு சரிவது போல நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமாகின. 1,500-க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுமார் 4000க்கும் அதிமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பிரபல கால்பந்து கிளப் அணிகளான செல்சியா எப்.சி மற்றும் நியூகேஸ்டில் எப்.சி அணிகளின் முன்னாள் முன்னணி வீரர் கானாவை சேர்ந்த கிறிஸ்டியன் அட்சு மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இயக்குநர் டானர் சவூத்தையும் காணவில்லை என ஹடேஸ்போர் கிளப்பின் செய்தி தொடரபாளர் முஸ்தபா ஓசத் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்கள் இருவரையும் தொடர்பு கொள்ள முடியாததால் இவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது என்றார். ஹடேஸ்போர் அணியை சேர்ந்த அட்சு மற்றும் சவூத் ஆகிய இருவரை மட்டுமே இன்னும் காணவில்லை மற்ற வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்தார்.

இது குறித்து கானா ஜனாதிபதி கூறுகையில், துருக்கி நாட்டு மக்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எங்கள் நாட்டு குடிமகன் கிறிஸ்ட்டியன் அட்சு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என நாங்கள் பிரார்த்திக்கிறோம் என கூறியுள்ளார்.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts