ஆரோக்கியம் | கல்வி | 2023-05-11 07:19:58

மாகாண மட்டத்தில் கல்முனை வலயம் முதலிடம் பெறும் ; கல்முனை வலய பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம் தெரிவிப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை (10.05.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை வலய கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி. நஸ்மியா சனூஸ் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். இங்கு விளையாட்டு வீரர்கள்,  விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் மத்தியில் வலயக் கல்விப் பணிப்பாளர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றும் போது,

கல்முனை கல்வி வலயம் கடந்த ஆண்டு கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது. தேசிய மட்டத்திலும் பல தங்கப் பதக்கங்கள் எமது வலயத்துக்கு கிடைத்துள்ளன. விளையாட்டு என்பது மாணவர்களுக்கு பல திறன்களை வழங்குகின்றது. மிக முக்கியமாக ஒழுக்கத்தை கற்றுத் தருகிறது.

மாணவர்களின் பாதுகாப்பு விடயத்தில் நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம். இந்த மைதானம் அமைந்துள்ள பிரதேசம் ரம்யமான இயற்கையான கடல் வளத்தை கொண்ட ஒரு பிரதேசமாகும். எனவே மாணவர்களை அழைத்து வந்திருக்கின்ற ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்களின் அனுமதி இல்லாமல் மைதானத்தை விட்டு மாணவர்கள் வெளியே செல்லக் கூடாது. மாணவர்களின் பாதுகாப்பு விடயத்தில் அழைத்து வந்த பொறுப்பாசிரியர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

குறிப்பாக கல்முனை வலயத்தில் இருக்கின்ற விளையாட்டு ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள். இங்கு இருக்கின்ற இந்த விளையாட்டு மைதானத்தை மாணவர்கள் பயன்படுத்துவதற்காக  இரவு பகலாக அவர்கள் தங்களை அர்ப்பணித்து பணியாற்றியுள்ளார்கள். மாணவர்களின் முன்னேற்றத்திற்காக, வெற்றிக்காக, பாடசாலைகளின் சாதனைகளுக்காக, கோட்டத்தின், வலயத்தின் முதல் நிலை இடங்களை பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் பணியாற்றுகிறார்கள். எனவே நான் அவர்களையும் இந்த சந்தர்ப்பத்தில் வாழ்த்தி பாராட்டுகின்றேன்.

எதிர்வரும் மாகாண மட்ட விளையாட்டு போட்டியின் போது, கல்முனை வலயம் முதலாம் இடத்தை பெற்று சாதனை நிகழ்த்தும் என்ற நம்பிக்கையை நான் இந்த இடத்தில் தெரியப்படுத்துகின்றேன். கோட்டத்தில் மிகச் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி வலய மட்டத்திலும், மாவட்டத்தில் முதல் நிலையை பெற்று மாகாணத்திலும் சாதனைகளை நிகழ்த்தி தேசிய மட்டத்தில் எமது மாணவர்கள் அதிக தங்கப் பதக்கங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என வாழ்த்தி விடை பெறுகிறேன் என்று தெரிவித்தார்.

கோட்டத்தில் உள்ள 17 பாடசாலைகள் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதுடன் 125 விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப நிகழ்வின் போது விளையாட்டுப் போட்டி செயலாளர், உடற்கல்வி ஆசிரியர் எம்.ஆர்.ஏ.கியாஸ், மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் உதவி அதிபர் எம். எம்.நியாஸ், அல்ஹம்றா வித்தியாலயத்தின் உதவி அதிபர் எஸ்.எம். ஜூகைறுத்தீன் உட்பட உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் ஏற்பாட்டாளர்கள் என பலர்  கலந்து கொண்டனர்.  


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts