கல்வி | கல்வி | 2023-04-29 05:51:50

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய வித்தியாரம்ப விழாவும், ஆங்கிலப் பேச்சு மொழித்திறன் விருத்தி ஆரம்பமும்!

(நூறுல் ஹுதா உமர்)

கல்முனை நகர கமு/கமு/இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 1 க்கு மாணவர்களை வரவேற்கும் "வித்தியாரம்ப விழாவும், ஆங்கிலப் பேச்சு மொழித்திறன் விருத்தி ஆரம்பமும்" இன்று வெள்ளிக்கிழமை (28) பாடசாலையின் அதிபர் ஏ.ஜீ. முஹம்மத் றிசாத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பாடசாலையில் தரம் 02 இல் கல்வி பயிலும் மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு புதிதாக அனுமதி பெற்ற தரம் ஒன்று மாணவர்கள் வரவேற்கப்பட்டதுடன், ஆரம்ப பிரிவின் ஆங்கிலப்பகுதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, உதவிக் கல்விப் பணிப்பாளரும் கல்முனை கோட்ட கல்வி அதிகாரியுமான ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ், உதவிக் கல்விப் பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்ட கல்வி அதிகாரியுமான என்.எம்.ஏ. மலீக் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

மேலும் கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.ஏ. சித்திக் மரிக்கார், சமூக செயற்பாட்டாளர் றிஹானா வஜீட் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர். பாடசாலையின் பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள்  பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தரம் ஒன்று மாணவர்களுக்கு அகரம் எழுதப்பழக்கியதோடு இனிப்பு வழங்கப்பட்டதுடன், சமூக செயற்பாட்டாளர் றிஹானா வஜீட் அவர்களினால் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பரிசில்களும், பாடசாலை உபகரணங்களும் மாணவர்களுக்கு  வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts