அஸ்லம் எஸ்.மௌலானா
Posted By Admin | Posted On 2019-08-16 00:19:28 | Views 896

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்திற்கு பதவியுயர்வு வழங்குவதற்காக கல்வி அமைச்சினால் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் மற்றும் விபரம் கோரும் படிவம் என்பன தனிச்சிங்களத்தில் அமைந்திருப்பதாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

இம்மொழிப்புறக்கணிப்பானது அரசாங்கத்தின் தேசிய மொழிக்கொள்கையை அப்பட்டமாக மீறும் செயற்பாடு எனவும் அந்த சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது விடயமாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் மேலும் தெரிவிக்கையில்;

"இலங்கை கல்வி நிர்வாக சேவை தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு தனிச்சிங்களத்தில் மேற்படி கடிதம் மற்றும் விபரம் கோரும் படிவம் என்பன அனுப்பி வைக்கப்பட்டிருப்பதனால், அதனை வாசித்து புரிந்த கொள்ள முடியாமலும் அப்படிவத்தை சிங்கள மொழியில் பூர்த்தி செய்ய முடியாமலும் அவர்கள் திண்டாட வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் நிர்வாக விடயங்களை கையாளும் கல்வி நிர்வாக, தாபனப் பிரிவின் மேலதிக செயலாளராக தமிழ் பேசும் உத்தியோகத்தர் ஒருவர் கடமையாற்றி வருகின்ற நிலையிலேயே தமிழ் மொழிப் புறக்கணிப்பு இடம்பெற்றிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கல்வி இராஜாங்க அமைச்சர், கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் போன்றோரும் தமிழ் பேசுவோராக இருக்கின்றபோதே இந்த அநியாயம் இழைக்கப்பட்டிருக்கிறது.

கடந்தமுறை மேற்படி விடயம் தொடர்பிலான கடிதம் மற்றும் படிவம் என்பன தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு அவர்களது தாய் மொழியிலேயே அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை ஆகக்குறைந்தது ஆங்கில மொழி மூலமாவது சம்மந்தப்பட்டோரின் விபரங்களை கோராமல், சிங்கள மொழியில் மாத்திரம் கோரியிருப்பதானது இவர்களை பெரும் அசௌகரியப்படுத்தியிருக்கிறது.

இதனால் இப்படிவத்திலுள்ள பகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டிய வலய மற்றும் மாகாணக் கல்வித் திணைக்கள முகாமைத்துவ உதவியாளர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அது மாத்திரமின்றி இப்படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புவதற்கு குறுகிய கால அவகாசமே கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டிருக்கிறது. பெருநாள் மற்றும் விடுமுறை தினங்கள் அதிகம் காணப்படுகின்ற இந்த வாரத்தில் இதனை பூர்த்தி செய்து அனுப்புமாறு பணிக்கப்பட்டிருப்பதனால் முஸ்லிம் உத்தியோகத்தர்களின் நிலை மிகவும் திண்டாட்டமாக காணப்படுகின்றது.

இப்பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியாக பரிசீலனை செய்வதுடன் எதிர்காலங்களில் இவ்வாறான மொழிப்புறக்கணிப்பு இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் வலியுறுத்தினார்.

Like Us in Facebook
நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Related Posts