கல்வி | கல்வி | 2019-07-25 20:39:47

எங்களை அரசு புறக்கணிக்காது உடனடி தீர்வை வழங்க வேண்டும் : பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் !! 

(நூருள் ஹுதா உமர்)

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதேச செயலகங்களில் நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டு அதில் தோற்றிய உள்வாரியான 16000 வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்புக்களை  வழங்குவதற்கான  நடவடிக்கையை  இவ்வருடம் ஆகஸ்ட் மாதம்  முதலாம்  திகதி மேற்கொள்ளவுள்ளது. 

அந்த பட்டதாரி நியமனத்தில் இலங்கை மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற  வெளிவாரிப்பட்டதாரிகள் எவரும்  உள்வாங்கப்படவில்லை என்று  வெளிவாரி  பட்டதாரிகள் கவலையுடன் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

பல துயரங்களை தாண்டி, சொந்த செலவில் கல்வி பயின்று பட்டத்தை முடித்த வெளிவாரி  பாட்டதாரிகளை இந்த அரச நியமனம் வழங்கும் பட்டியலில் உள்வாங்காமை  தொடர்பில்    ஜனாதிபதி  மைத்திரிபால  சிறிசேனவும் , பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவும் கவனம் செலுத்தி  உரிய தீர்வை எங்களுக்கு பெற்றுத்தர முன்வர வேண்டும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினரால் பட்டதாரிகளாக ஏற்று கொள்ளப்பட்ட எங்களை இந்த அரசு ஏன் புறக்கணிக்கிறது?

கடந்த அரசில் வழங்கப்பட்ட எந்த நியமானத்திலும் பட்டதாரிகளை  உள்வாரி பட்டதாரிகள், வெளிவாரி  பட்டதாரிகள் என  வேறுபடுத்தாது  அனைத்து  வேலையில்லா  பட்டதாரிகளுக்கும்  வேலை  வாய்ப்புக்களை வழங்கினர். அதுபோன்று இந்த அரசும் சகல பட்டதாரிகளையும் வேற்றுமையில்லாத முறையில் கணித்து தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான  நடவடிக்கைகளை  உடனடியாக  மேற்கொள்ள  வேண்டும்  எனவும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கோரிக்கை  விடுக்கின்றனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts