கல்வி | கல்வி | 2019-07-15 07:52:52

சீயோன் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி

சீயோன் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் இறுதிக் கிரியைகள் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.

கூழாவடி 8ம் குறுக்கிலுள்ள அவரது இல்லத்தில்  (சனிக்கிழமை) இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

அதனையடுத்து அன்னாரின் சடலம் கூழாவடி பிரதான வீதி, இருதயபுரம் ஊடாக எடுத்துச் செல்லப்பட்டு, ஊறணி பொது மைதானத்தில் இறை வழிபாட்டுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது சீயோன் தேவாலய போதகர்கள், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த குறித்த பெண், மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார் எனினும் சிகிச்சைப் பலனின்றி கடந்த வியாழக்கிழமை அவர் உயிரிழந்திருந்தார்.

மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த கருணாகரன் உமாசங்கரி (வயது – 22) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

இவரின் உயிரிழப்பையடுத்து, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிரபல நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

அத்தோடு 500இற்கும் மேற்பட்டோர் அவயங்களை இழந்தும் படுகாயங்களுக்கு உள்ளாகியும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts