கல்வி | கல்வி | 2023-10-06 09:38:48

மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியின் முன்மாதிரியான சிறுவர் தின நிகழ்வுகள்!

மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியானது இவ்வருட சிறுவர் தின நிகழ்வை ஒரு முன்மாதிரியான நிகழ்வாக நடாத்தியிருப்பது மிகவும் பெருமைக்குரிய விடயமாகும். அந்த வகையிலே  'எல்லாவற்றுக்கும் மேலாகப் பிள்ளைகள் பெறுமதியானவர்கள்' என்னும் எண்ணக்கருவை மாணவர் சமுதாயம் உணர்ந்து கொள்ளத்தக்க வகையில்  மூன்று முக்கிய நிகழ்வுகளூடாக வழங்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும். அந்த வகையில்
1. ஆளுக்கொரு புத்தகம் அன்பளிப்பு செய்வோம். 

2. சகோதர பாடசாலை மாணவர்களும் ஸாஹிராவை தரிசிக்கும் சந்தர்ப்பம். 

03. தேவையுடையோரை தேடிச்சென்று உதவுவோம். 

ஆகிய மூன்று நிகழ்ச்சித் திட்டங்களும் கல்லூரியின் அதிபர் ஏ.எம்.நௌஸாத் தலைமையில் கடந்த செவ்வாய்கிழமை (03.10.2023)  கல்லூரியில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. 

அந்த வகையில் மூன்று நிகழ்ச்சி திட்டங்களும் இவ்வாறாக நடந்தேறியது. 

1. ஆளுக்கொரு புத்தகம் அன்பளிப்புச் செய்வோம் எனும் தொனிப்பொருளில் ... 

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வாசிப்பின் மூலம் உயர்ந்ததோர் உன்னத இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் வாசிப்புப் பழக்கத்தை மாணவர்களிடையே ஆர்வமூட்டும் முகமாகவும் நிலையான தர்மம் ஒன்றைச் செய்வதற்கான சந்தர்ப்பமாகவும் சகல மாணவர்களும் கல்லூரிக்கு 'ஆளுக்கொரு புத்தகம் அன்பளிப்புச் செய்வோம்' நிகழ்ச்சித் திட்டத்தினூடாக சுமார் 1000க்கும் மேற்பட்ட புத்தகங்களை அன்பளிப்புச் செய்திருந்தனர். 

இந்தப் புத்தகங்கள் அனைத்தும் சகல வகுப்புக்களுக்கும் பகிர்நதளிக்கப்பட்டு வாசிப்பு மூலைகள் உருவாக்கப்பட்டு ஆசிரியர்கள் வருகை தராத பாடவேளை, ஒதுக்கப்படாத பாடவேளை, நூலகப் பாடவேளை போன்ற நேரங்களை வாசிப்பதற்குப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

அத்தோடு பழைய மாணவர் சங்கம், பழைய மாணவியர் சங்கம் என்பன தலா 15000 ரூபா பெறுமதியான (மொத்தம் 30000 ரூபா பெறுமதியான) புத்தகங்களை இக் கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. 

2. சகோதர பாடசாலைகளும் ஸாஹிராவை தரிசிக்கும் சந்தர்ப்பம். 

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு "சகோதர பாடசாலைகளும் ஸாஹிராவை தரிசிக்கும் சந்தர்ப்பம்" நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் Danagama Muslim Vidyalaya, Delgahagoda Muslim Vidyalaya, Ganethanna Muslim Vidyalaya ஆகிய மூன்று பாடசாலைகளின் தரம் 06,07ஆம் வகுப்பைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் தமது கல்லூரி பேருந்தின் மூலம் தமது கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு புத்தகம் பழைய மாணவிகள் சங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்டு நான்கு பாடசாலை மாணவர்களிடையேயும் நல்லுறவை ஏற்படுத்தும் இன்னும் பல நிகழ்வுகளும் நடைபெற்றதோடு குறித்த மூன்று பாடசாலைகளது நூலகங்களுக்கும் ஒரு தொகைப் புத்தகங்களும் OGA இனால் அன்பளிப்புச் செய்யப்பட்டன. 

3. தேவையுடையோரை தேடிச் சென்று உதவுதல். 

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு "தேவையுடையோரைத் தேடிச் சென்று உதவுதல்" எனும் நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் நாட்டின் நாலாபுறங்களிலும் உள்ள சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அதிகஷ்ட பிரதேச பாடசாலைகள் மற்றும் விசேட தேவையுடையோர் இல்லங்கள் போன்ற சுமார் 15இற்கும் மேற்பட்ட இடங்களுக்கு எமது கல்லூரி மாணவர்கள் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியதோடு அவர்களோடு இணைந்து சிறுவர் தின சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடாத்தி வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இந்நிகழ்வின் மூலம் இப்பாடசாலை மாணவர்கள் தேவை உடையோரின் நிலைமைகளைப் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தினையும் பெற்றனர். 

இதனால் இளைஞர் சமுதாயத்தின் மத்தியில் மனிதாபிமானமும், சகோதரத்துவமும், உதவி செய்யும் மனப்பான்மையும் மேலும் வளர்ச்சி அடைவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுமென கல்லூரி அதிபரின் எதிர்பார்ப்பாகும்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts