கட்டுரைகள் | அரசியல் | 2022-01-22 18:40:51

சந்தர்ப்பம் இழக்கப்போகும் சாமர்த்திய அரசியல்?

-சுஐப் எம்.காசிம்-

அபிவிருத்தி இலக்குகளில் தஞ்சமடைவது மக்கள் ஆணையை மீறுவதாகக் கருதும் தமிழ்தேசிய கூட்டமைப்பு, இனப்பிரச்சினையை மூடிமறைக்கும் எந்த யுக்திகளிலும் சிக்காமல் பயணிப்பதாகவே கூறுகிறது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின், இரண்டாவது கூட்டத்தொடரில் விடுக்கப்பட்ட அழைப்பையும் இதற்காகவே பொருட்படுத்தாமலும் உள்ளது இக்கட்சி. எனினும், ஜனாதிபதியின் அழைப்பிலிருந்து ஒரு புதிய பயணத்துக்கு தயாராகியிருக்கலாமென்ற கருத்துக்களும் தமிழர் தரப்பில் இருக்கின்றனதான். எதிர்ப்போக்குகளால், அடைந்தவை எதுவுமின்றி இருக்கையில், இணக்கப்பயணம் பற்றி யோசிக்கலாம்தானே! இந்த நிலைப்பாடுகளிலுள்ளோர்தா ன், ஜனாதிபதியின் உரையிலும் நியாயம் காண்கின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட உள்ள அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது, இவர்களை எந்தளவில் தரம் குறைக்கும்? உரிமைக்காக குரலெழுப்ப வந்த எம்.பிக்கள், தங்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதிகளில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்காமலா இருக்கின்றனர்? இல்லையே! இதைப்போல, அரசாங்கத்தின் அபிவிருத்தி, வாழ்வாதார மற்றும் புரட்சித்திட்டங்களுக்கு ஒத்துழைக்கவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒத்துழைப்புக்கள் அரசாங்கத்துக்கு ஒத்தூதுவதாக அமையும் என்றுதானா, தமிழ் கட்சிகள் ஒதுங்கினவோ தெரியாது!

அரசாங்கத் தலைவரின் உரையில், இனப்பிரச்சினை பற்றியோ அல்லது தீர்வுக்கான எத்தனங்கள் குறித்தோ எதுவுமில்லை. இதனால், ஒத்துழைத்து அல்லது ஒன்றித்து இயங்குவது, ஒற்றையாட்சிக்கான அங்கீகாரமாக சர்வதேசத்தில் அடையாளப்படலாமென தமிழ் கட்சிகள் ஒதுங்கி நிற்கின்றன. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த அழுத்தம் வழங்குமாறு இந்தியாவுக்கு நகலனுப்பியுள்ள இந்தச் சூழலில், இது ராஜதந்திரம் இல்லையென்பதுதான் தமிழ் தலைமைகளின் ராஜதந்திரம். அதுவும் ஜெனீவா அமர்வுகள், பெப்ரவரி 28 இல் ஆரம்பமாகி, ஏப்ரல் ஒன்றுவரை நடைபெறவுமுள்ளன. இதற்குள், மார்ச் 03 இலங்கை விவகாரத்துக்கென ஒதுக்கப்பட்டுமுள்ளதே!

கடந்த வருடத்தைப் போன்று கடுமையாக உழைத்தால், இந்த முறையும் சாதகம் என்பதுதான் இவர்களிடமுள்ள வியூகம். இதே, ராஜதந்திரம் அரசாங்கத்துக்கும் உள்ளதெனச் சிலர் சிந்திக்கின்றனர். ஆனாலும், வெளிநாட்டு அழுத்தங்களைப் பொருட்படுத்தாதுள்ள போக்குகள், ஜெனீவா அமர்வில் இதற்கு முன்னர் வெற்றி, தோல்வியென இரண்டையும் சந்தித்த அனுபவங்கள் எல்லாம் களத்தின் கனதியை உணர்த்தாமலாயிருக்கும். எனவே, ஒத்துழைக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பிலுள்ள பிரதானம், பீதியாக இருக்காது என்பது உண்மையே!ஆனால், ராஜதந்திரம் இல்லாமலில்லை. எனவே, இவ்விரு ராஜதந்திரங்கள் பற்றிய அல்லது இந்த தந்திரங்கள் ஏன் எழுகின்றன? என்ற புரிதல்களில் பயணிப்பதற்கு தயாராக வேண்டியுள்ளது.

'இருப்போர் எல்லோரும் இலங்கையர்தான். சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை என்று எவருமில்லை' என்கிறது இந்த அரசு. மொழிகளுக்காக அல்லது மதத்துக்காக சிந்திக்கும் மனநிலைகளிலிருந்து விடுபட்ட இலங்கைக்குள் வாழத்தான் அழைக்கிறோம். ஜனாதிபதியின் இந்த அழைப்பால், அரசியலுக்காகப் பேசுவோர் அதிர்ச்சியடைந்திருப்பர். உரிமைகளுக்காகப் பேசுவோர் உணர்ச்சிவசப்பட்டிருப்பர். தனிப்பட்ட ஆளுகை மாத்திரம்தான் உரிமை என்பதில்லையே! பாதைகள், பல்கலைக்கழகங்கள், பொருளாதார மேம்பாடுகள் மற்றும் வாழிடங்களின் பாதுகாப்புக்களும் உரிமைகளிலுள்ளவைதான். ஆனால், இவை பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும். வாழும் உரிமையைத்தான் தமிழர்கள் கேட்பதாக குரல்கொடுப்போர், 'இவைகளைப் பெற்று தமிழர்களை வாழவிடுங்கள், பலிக்கடாக்களாக்காதீர்கள்' என்ற விவாதப் பொறியைத்தான் அரசாங்கம் முன்வைத்துள்ளது.

இவை அனைத்தையும் பிறரிடமிருந்து பெறாமல், தமிழர்கள் சுயமாகப் பெற்று வாழும் அரசியல் அதிகாரமே எங்களுக்கு அவசியமென்கிறது தமிழர் தரப்பு. இவற்றைப் பெறுவதில் கடந்த காலங்களில் காட்டப்பட்ட பாரபட்சங்களே அதிகார மோதலாகப் பரிணமித்ததென்பதுதான் இவர்களது வாதம். என்னவோ, இவை எல்லாம் இப்போது வன்முறைகளல்லாது வாதங்களாக மாறியிருப்பதால்தான், அழிவுகளிலில்லாது நமக்கு வாழக் கிடைக்கிறது. அந்தளவில் இது நிம்மதிதான்!


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts