கட்டுரைகள் | அரசியல் | 2019-11-01 15:00:31

தற்போதே முஸ்லிம்களை புறக்கணித்த கோத்தா! அண்ணனை காட்டி தம்பிக்கு திருமணம்! முஸ்லிம்கள் ஆதரிப்பார்களா...?

மிஸ்பாஹுல் ஹக்

முதற் கோணல் முற்றிலும் கோணலென்பார்கள். கோத்தா இப்போதே முஸ்லிம்களை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டார். நேற்று ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ அம்பாறை மாவட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இருந்த போதிலும் அம்பாறை முஸ்லிம் கிராமங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பொதுவாக ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் காலங்களில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு விசேட வருகை தருவார்கள்.

கோத்தா சிறுபான்மை மக்களிடையே சந்தைப்படுத்த முடியாத காலாவதியான ஒருவர் என்பது யாவரும் அறிந்த ஒன்று. இத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினர் சிறுபான்மை மக்களின் வாக்குகளை கருத்தில் கொண்ட வியூகம் வகுத்திருந்தால், நிச்சயம் கோத்தாபாயவை தெரிவு செய்திருக்க மாட்டார்கள். அவர்களின் வியூகங்கள் தனி சிங்கள வாக்குகளையே மையப்படுத்தியிருந்தன. இப்போது சஜிதின் வருகையால் ஐ.தே.முவிற்கு ஏற்பட்ட எழுச்சியை பார்த்து மிலைத்து நிற்கின்றனர் மொட்டு அணியினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சாய்ந்தமருது, அக்கறைப்பற்று ஆகிய ஊர்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பங்குபற்றுதலுடன் மொட்டு அணியினரின் பிரச்சார கூட்டங்கள் ஏற்பாடாகியிருந்தன. இதில் கோத்தா கலந்து கொள்வார் என்றிருந்த போதும் கலந்துகொள்ளவில்லை. குறித்த தினம் கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோத்தாவை முஸ்லிம்கள் ஏற்பதை விட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை ஓரளவு ஏற்பார்கள். மஹிந்தவை காட்டி கோத்தாவுக்கு வாக்கு சேகரிக்கும் உத்தியே அங்கு பயன்படுத்தப்பட்டிருந்தது. சிங்கள வாக்குகளை மையப்படுத்தி வியூகம் வகுத்தவருக்கு, முஸ்லிம்களிடம் சென்று என்ன பேசுவதென அறியாமல் புறக்கணித்தாரோ தெரியவில்லை. இது தங்கச்சியை காட்டி, அக்காவை திருமணம் செய்து கொடுப்பது போன்றல்லவா உள்ளது? மொட்டு அணியினருக்கே கோத்தாவை முஸ்லிம்களிடையே சந்தைப்படுத்த முடியாதென தெரிந்துள்ள போது, ஏன் எம்மவர்கள் அவரை சந்தைப்படுத்த இத்தனை பிரயத்தனங்களை எடுக்கின்றனர்.
நேற்று அம்பாறையில் கோத்தாவின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற மொட்டுவின் பிரச்சார மேடைக்கு முஸ்லிம் மொட்டு அணியினர், தங்களது பிரதேசங்களிலிருந்து ஆட்களை அழைத்து சென்றிருந்தனர். தங்களது ஜனாதிபதி வேட்பாளரை, தங்களது பிரதேசங்களுக்கு அழைத்து வர திராணியற்றவர்களுக்கு, அம்பாறைக்கு ஆட்களை அழைத்து செல்ல வெட்கமில்லையா? கோத்தா வென்றால், அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அம்பாறைக்கே செல்ல வேண்டுமென கோத்தா கூறாமல் கூறுகிறாரோ?
இப்போதே எம்மை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டார். ஆட்சியமைத்தால் சொல்லவா வேண்டும். நாம் தேவையில்லையென தேர்தல் வியூகமமைத்தவர்களுக்கும், தங்களது செயற்பாட்டை முன்னெடுப்பவர்களும், நாம் ஏன் வலிந்து சென்று ஆதரவளிக்க வேண்டும். அதனைப் போன்ற மடமை, சுயநலம், இழிவு வேறேதுமிருக்குமா? இம் முறை சிந்தித்து வாக்களிப்போம்.
 


Related Posts

Our Facebook

Popular Posts