பிராந்தியம் | அரசியல் | 2023-10-04 07:50:07

முஸ்லிங்களின் பிரச்சினைகளும் ஜெனீவாவின் கவனத்திற்கு ஆதாரங்களுடன் முன்வைக்கப்படல் வேண்டும் - ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினர் கலிலூர் ரஹ்மான்!

( நூருல் ஹுதா உமர் )

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள புல்மோட்டை அரிசிமலை பிரதேசத்தில் அமைந்துள்ள காணி விவகாரம் தொடர்பில் பௌத்த தேரர்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையில் நீண்ட காலமாக நிலவிவரும் முரண்பாட்டை காணி அமைச்சர் தலையிட்டு விரைவில் சட்ட ரீதியாக தீர்த்து வைக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

ஏனெனில் காணி விவகாரம் தொடர்பில் பௌத்த தேரர்களுக்கும் முஸ்லிங்களுக்குமிடையில்   வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறும் வாய்ப்புகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் காணொளிகளில் தெரிகிறது. இதனால் இனமோதல்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இந்த நிலை நாட்டுக்கு ஆபத்தானதாகும் என ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், 

எனவே நாடு முழுவதும் உள்ள இவ்வாறான இன முரண்பாட்டை தோற்றுவிக்கக்கூடிய  காணிகள் தொடர்பில் அரசாங்கம் முறையாக அவசரமாக தலையிட வேண்டும்.  இல்லையேல் பேராசை அரசியல் நலன்களுக்காக இரு தரப்பு கடும்போக்கு சிந்தனையாளர்கள் பிரச்சினைகளுக்கு வேறு உருவம் கொடுத்து, திசைதிருப்பி குழுப் பிரச்சினைகளாக மாற்றி நாட்டை சீரழித்து விடுவார்கள். இவர்களை பற்றி அலட்டிக்கொள்ளாமல் இவ்வாறான காணிப் பிரச்சினைகளை விட்டால் அது நாளடைவில் விரிவடையும் சாத்தியம் உள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ள முஸ்லிம் சமூகம் நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக பாடுபட்டதன் காரணமாக யுத்தத்தின் போது பெருமளவான காணிகளை யுத்தகாலத்தில் இழந்துள்ளனர்.  முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் அரசியல் மற்றும் சிவில் தலைவர்கள் உடனடியாக தலையிட்டு யுத்தகாலத்தில் இழந்த முஸ்லிங்களின் காணிகளை முறையான நடவடிக்கைகளை எடுத்து சட்ட ரீதியாக மீட்டுக்கொடுக்க முன்வரவேண்டும்.

இந்தப் பிரச்சினைகளை முன்வைத்து அரசியல்வாதிகள் தொடர்ந்தும் அரசியல் செய்யாது நிரந்தர தீர்வை காண நாட்டின் ஆட்சியாளர்களை அணுகி தேசிய அரசியல் நீரோட்டத்தில் நடவடிக்கை  எடுக்க வேண்டும். மட்டுமின்றி அரசியல் சக்திகளை மட்டும் நம்பிக்கொண்டிராமல் மனிதாபிமானமுள்ள சட்ட வல்லுநர்கள், முஸ்லிம் சட்டத்தரணிகள் நீதித்துறை நடவடிக்கை மூலம் தீர்வு காண முன்வர வேண்டும். இவர்களுக்கு பக்கபலமாக முஸ்லிம் சிவில் அமைப்புக்கள், வர்த்தக பிரமுகர்கள் இருக்க வேண்டும்.

அதேபோல், போருக்கு முன்னும் பின்னும் நான்கு தசாப்தங்களாக முஸ்லிம் சமூகம் அனுபவித்த துன்பங்களை ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஆதாரங்களுடன் அறிக்கைகளை கொண்டு தெரிவித்து முஸ்லிங்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மனிதாபிமான மனிதநேயத்தின் எல்லையற்ற பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts