பிராந்தியம் | சமூக வாழ்வு | 2019-12-09 23:48:08

சாய்ந்தமருதில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்த தோணா சுத்திகரிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்)

தற்போதைய வெள்ள அனர்த்த அபாய நிலைமையை கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபையும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து சாய்ந்தமருது தோணாவை சுத்திகரிப்பு செய்யும் வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை (079) ஆரம்பமானது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இப்பணி முன்னெடுக்கப்படுகிறது.

இவ்வேலைத் திட்டத்தின் மூலம் இத்தோணாவில் தேங்கியுள்ள சல்பீனியாக்களும் பொது மக்களினால் வீசப்பட்டு நிரம்பியுள்ள திண்மக்கழிவுகளும் தோண்டி அள்ளப்பட்டு, அங்கிருந்து அகற்றப்படவுள்ளன.

இவ்வாறு தோணா சுத்திகரிப்பு செய்யப்பட்டு, ஆழமாக்கப்படுவதன் மூலம் வெள்ள நீர் யாவும் இத்தோணாவினால் முழுமையாக உள்வாங்கப்பட்டு, கடலுக்கு செலுத்தப்படும். இதனால் சாய்ந்தமருது பிரதேசம் மாத்திரமல்லாமல் மாளிகைக்காடு, காரைதீவு போன்ற பிரதேசங்களும் பாரிய வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்புப்பெறும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த பல நாட்களாக பெய்து வந்த பெருமழை காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வளவுகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மற்றும் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் ஆகியோரின் நேரடி வழிநடாத்தலில் மாநகர சபை ஊழியர்கள் இரவு, பகலாக பெரும் அர்ப்பணிப்புடன் வெள்ள அனர்த்த பாதுகாப்புக்கான பாரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் பிரகாரம் சாய்ந்தமருது பிரதேசத்திலும் பல்வேறு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சில தினங்களுக்கு முன்னர் தோணா- கடல் முகத்துவாரம் திறக்கப்பட்டதுடன் தோணாவின் சில இடங்களில் காணப்பட்ட பாரிய தடைகள் தோண்டி அகற்றப்பட்டிருந்தன. வீதி வடிகான்களும் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகின்றன. சில வீடு, வளவுகளில் தேங்கி நிற்கின்ற வெள்ளம் நீர் இறைக்கும் இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகின்றது.

இவற்றை முழுமையாக ஒருங்கிணைத்து வெள்ள அனர்த்த பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலேயே தற்போது தோணா சுத்திகரிப்பு வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத் திட்டத்திற்கான செலவில் மூன்று இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ள அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.சி.எம்.றியாஸ் அவர்களுக்கும் மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

தோணா சுத்திகரிப்பு வேலைத்திட்ட மேற்பார்வை பணிகளில் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.ஜௌபர், கல்முனை மாநகர சபை மேற்பார்வை உத்தியோகத்தர் யூ.கே.காலித்தீன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts