பிராந்தியம் | அரசியல் | 2019-11-12 16:33:06

கிழக்கு மக்களுக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக்கொடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷ: முன்னாள் அமைச்சர் சுபையிர்

(றியாஸ் ஆதம்)

பயங்கரவாத யுத்தம் இந்த நாட்டிலே நிலைகொண்டிருந்த போது கிழக்கு மாகாண இளைஞர்களை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொள்ளச்செய்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்தி மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரத்தினை வழங்கிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து, ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டிலே யுத்தம் நிலைகொண்டிருந்த போது சர்வதேச சக்திகளுக்கு அடிபணியாது யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை மஹிந்த ராஜபக்ஷவையே சாரும். யுத்த காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் முடக்கப்பட்டிருந்தது. உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் கூட நடாத்தப்படாது உள்ளுராட்சி மன்றங்கள் முடங்கியிருந்தன. இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாண இளைஞர்களை ஜனநாயத்தின்பால் கொண்டு வருவதற்காக கிழக்கு மாகாண சபை தேர்தலை நடாத்தி அந்த மக்களது கைகளில் ஆட்சி அதிகாரத்தை வழங்கிய மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் மறந்துவிட முடியாது.

குறிப்பாக வடகிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த போது 17வீதமாக காணப்பட்ட முஸ்லிம்கள், வடகிழக்கு தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டதன் பின்னர் 41வீதமாக காணப்படுகின்றனர். இவ்வாறான வரலாற்று பணிகளை செய்து, கிழக்கு மாகாணத்திலே வாழும் மூவின மக்களும் ஒற்றுமையாகவும், சந்தோசமாகவும் வாழக்கூடிய ஒரு அமைதியான சூழலை ஏற்படுத்திய தலைவர் மஹிந்த ராஜபக்ஷவேதான் என்பதனை கிழக்கு மாகாண மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டையும், நாட்டு மக்களையும் நேசித்து இவ்வாறான பணிகளை செய்த ஒருவருடைய ஆட்சியினை வீழ்த்துவதற்காக அவர் மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், இறுதியில் அவர்களின் எந்தவொரு குற்றச்சாட்டுக்களையும் நிருபிக்கவில்லை. நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் சமூகம் அந்த ஆட்சியில் இனவாதம் ஒழிக்கப்படும், பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும், போதைவஸ்து பாவனை கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்த்தார்கள், ஆனால் எதுவுமே நடக்கவில்லை.

யுத்தத்தனை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தியால் அலங்கரித்தார். கைவிடப்பட்ட எமது மக்களின் விவசாயக் காணிகளுக்கு சென்று விவசாயம் செய்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டது. யுத்ததினால் வெளியேறிய மக்கள் தத்தமது பகுதிகளுக்கு சென்று மீளக்குடியேறினர். குறிப்பாக கிழக்கில் உள்ள மக்கள் ஐக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்தனர்.

எமது முஸ்லிம் தலைவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி நாம் மஹிந்தவை தோற்கடித்து இன்று எமது நிம்மதிகளை தொலைத்தவர்களாக கைசேதப்பட்டுள்ளோம் எனவே முஸ்லிம் தலைமைகளின் போலிப்பிரச்சாரங்களை நம்பி நாம் ஒருபோதும் ஏமாறமுடியாது. மஹிந்தவை தோற்கடித்து இந்த மண்ணிலே மாற்றங்களை கொண்டு வருவோம், இனவாதத்தினை ஒழித்து, அமைதியையும் சமாதானத்தினையும் ஏற்படுத்துவோம் எனக்கூறிய முஸ்லிம் தலைவர்கள் இறுதியில் எதைத்தான் கொண்டு வந்தார்கள்.

அவர்கள் கொண்டுவந்த நல்லாட்சியில் ஒரு சாதாரண தொழிலாளி தொழிலுக்கு செல்ல முடியாது, விவசாயி வயலுக்குச் செல்ல முடியாது, மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது. அவ்வாறு இனவாதம் தலைதூக்கி காணப்பட்டது. பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டது. பாதுகாப்பு தரப்பினரின் கண்முன்னே முஸ்லிம்கள் அடித்துத் துரத்தப்பட்டனர். எந்தவொரு ஆட்சியிலும் இடம்பெறாத துக்ககரமான சம்பவங்களே இடம்பெற்றது. திகன சம்பவம் இடம்பெற்ற போது சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் சமூகத்திற்காக எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை. இவ்வாறான நிலையில் முஸ்லிம் தலைவர்கள் மஹிந்த குடும்பத்தினை வைத்து பொய்களை கூறி அரசியல் செய்கின்றனர்.

இந்த நாட்டிலே சமாதானத்தினை விரும்புகின்ற ஒவ்வொருவரும், கோட்டபாயவை ஆதரிப்பதற்கு முன்வந்துள்ளனர். பெரும்பான்மை மக்களில் கனிசமானோர் கோட்டபாயவை ஜனாதிபதியாக்குவதற்கு தீா்மானித்துள்ளனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் கோட்டபாயவை ஆதரித்து ஆட்சியின் பங்காளர்களாக மாறுவதற்கான முயற்சிகளை செய்கின்றனர். எனவே இந்தத் தேர்தலில் முஸ்லிம் சமூகமும் சிந்தித்து, கடந்த 30வருட கால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் நிம்மதியான சூழலை ஏற்படுத்திய மஹிந்தவுக்கு நன்றி செலுத்தும் வகையில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்து அவரின் வெற்றியின் பங்காளர்காக மாறுவோம் என்றார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts