பிராந்தியம் | அரசியல் | 1970-01-01 05:30:00

ஏப்ரலில் தலைகுனிந்த எம் சமூகம் ஜனாதிபதியை தெரிந்து நவம்பரில் தலைநிமிரும் : எந்த அரசிலும் நான் அமைச்சராக வர தெரிந்தவன். ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு !!

நூருல் ஹுதா உமர், ஏ.எல்.எம்.ஷினாஸ்

ஜனாதிபதித் தேர்தலில் பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவருக்கு தனது ஆதரவை வழங்கி ஏனைய முஸ்லிம் உறுப்பினர்களைப் போல அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ள தனக்கும் முடியும். ஆனால், அந்த அமைச்சுப் பதவிகளால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. அவற்றை பாதுகாப்பதற்காகவே தான் தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்’ என அழைக்கப்படும் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (18.10.2019) இரவு அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

முஸ்லிம் சமூகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்ற பிரச்சினைகளுக்கும் கஸ்டங்களுக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரும் தீர்வு கிடைக்கப்போவதில்லை. நமது முன்னோர்கள் கஸ்டப்பட்டு நமக்கு சட்டரீதியாக பெற்றுத் தந்த உரிமைகளை சட்டரீதியாகவே மீள பரிப்பதற்கு இரண்டு பிரதான வேட்பாளர்களின் முகாம்களில் இருக்கின்ற நமது சமூகத்தின் எதிரிகள் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளனர். தேர்தல் முடிந்தவுடன் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக முன்னெடுப்பார்கள்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் முஸ்லிம்கள் அனுபவிக்கின்ற மத சுதந்திரம் மற்றும் உரிமைகளை எவ்வாறு பறிப்பது என்பது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அசூ மாரசிங்க, ரத்தன தேரர் மற்றும் ஞானசார தேரர் போன்றவர்களின் தலைமையில் சூழ்ச்சி செய்யப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் தேர்தல் வந்தமையால் தேர்தல் முடிந்தவுடன் அவர்களின் திட்டங்களை அரங்கேற்றுவதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.

நம்மைப் பொறுத்தவரை சஜித் பிரேமதாசவாகட்டும், கோத்தாபய ராஜபக்ஸவாகட்டும், ரணில் விக்கிரமசிங்கவாகட்டும், மஹிந்த ராஜபக்ஸவாகட்டும் எமக்கு எல்லாறுமே ஒன்றுதான். எமக்கு எவரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது. இவர்கள் எமது சமூகத்தின் உரிமைகளை மீளப்பறிப்பதில் ஏட்டுக்குப் போட்டியாக செயற்படுவார்கள்.

இவர்கள் எமது உரிமைகளை பாதுகாப்பார்கள் என்றோ எதிர்வரும் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளின் போது எமக்கு உதவுவார்கள் என்றோ ஒரு போதும் நம்பமுடியாது. மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் அலுத்கம கலவரம் ஏற்பட்ட போது எமது சமூகம் மாற்றமடைந்து மஹிந்த ராஜபக்ஸவை தூக்கியெறிந்து தோல்வியடையச் செய்தது. பின்னர் மைத்திரிபால சிறிசேனவின் பின்னணி பற்றி எதுவும் யோசிக்காமல் முஸ்லிம் அரசியல் தலைமைகள் உள்ளிட்ட சகலரும் அவருக்கு ஆதரவு வழங்கி 16 இலட்சம் முஸ்லிம் வாக்குகளில் 12 இலட்சம் வாக்குகளை அள்ளி வழங்கி அவரை ஜனாதிபதியாக்கினோம். ஆனால், இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதும் தாக்கப்பட்டதும் கடந்த நான்கரை வருட அவரது காலப் பகுதியிலாகும்.

சுமார் 340 சம்பவங்கள், நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் ஜிந்தோட்டை முதல் மினுவங்கொடை வரை நாம் தாக்கப்பட்டுள்ளோம். எமது உரிமைகள் பிரதிநிதித்துவங்களை பாதுகாக்க வேண்டும் எனில் நாங்கள் எமது அரசியல் போக்கில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் தலைவர் அஷ்ரஃப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை 1987ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தல்களின் போதும் பேரம் பேசும் சக்தியாக இருந்து முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுத்தார். ஆனால் தலைவர் அஸ்ரப்க்கு பின்னர் அந்நிலை மாற்றமடைந்து சமூகம் சார் பேரம் பேசல்கள் உடன்பாடு எதுவும் இன்றி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குகின்ற நிலையைக் காண்கின்றோம். இதனால் எமது சமூகம் அடைய வேண்டிய பல நன்மைகளை இழந்துள்ளது.

சகோதர தமிழ் சமூகமும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியது. ஆனால், ஒப்பந்த அடிப்படையில் தமது ஆதரவினை வழங்கி அமைச்சுப் பொறுப்புக்களை பெறாவிட்டாலும் தமது உரிமைகளை பாதுகாத்தனர். அவர்கள் தமது அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டாலும், மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார்கள்.

தேர்தல் காலத்தில் தான் பேச வேண்டியதை பேச வேண்டும் ; கேட்க வேண்டியதை கேட்க வேண்டும். எமது சகோதர தமிழ் சமூகத்துக்கு பேச முடியும் என்றால் ஏன் எம்மால் மாத்திரம் முடியாது? இக்காலத்தில் பேசாமல் தேர்தலுக்கு பின்னர் சென்று பிரேமதாசவுடனோ – கோத்தாபாயவுடனோ எப்படி பேசி தமது உரிமைகளை பெற முடியும்?

காலி முகத்திடலில் நடைபெற்ற ஐ.தே.க. கூட்டத்தில் மேடையில் இருந்த அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் ரிசாத்தை பெயரைச் சொல்லி விழித்தால் சிங்கள வாக்குகள் உடையும் என பயந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் அவர்களது பெயரை குறிப்பிடாமல் மேடையிலிருந்து கீழே இறக்கினர். 10-15 இலட்சம் வாக்குகளை வைத்துள்ள முஸ்லிம் தலைமைகளின் பெயர்களை குறிப்பிடவே பயந்தால் தேர்தலுக்கு பின்னர் எமது நிலை என்ன?
இவ்வாறான நிலையில் இந்த தேர்தலில் நான் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டால் பல பிரச்சினைகள் - ஏச்சு பேச்சுக்களை எதிர்நோக்க வேண்டி வரும் என்பது எனக்குத் தெரியும். முப்பது வருடங்கள் அரசியலில் இருக்கின்றேன் - அரசியலில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளேன். எனவே, எனது தீர்மானத்தால் எதிர்நோக்க வேண்டி வருகின்ற பிரச்சினைகள் பற்றி எனக்கு நன்கு தெரியும். இருந்தாலும் எமது சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எமது உரிமைகளை பாதுகாப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
ஏனைய முஸ்லிம் உறுப்பினர்களை போல எனக்கும் சஜித்துக்கோ கோத்தாபயவுக்கோ ஆதரவு வழங்கி அமைச்சுப் பதவிகளை பெற முடியும். நாங்கள் பெரும் அமைச்சுப் பதவிகளால் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. பிரச்சினைகள் ஏற்படும் பேது ஒரு கட்டத்துக்கு மேல் வாய் பேசவும் முடியாது.

எனவே, சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் எமக்கு இந்த அரசாங்கத்தையே தீர்மானிக்க முடியுமா? ஒரு ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக எமது சமூகத்தை எவ்வாறு அடையாளப்படுத்துவது? என நாங்கள் ஆளமாக ஆராய்ந்தே ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும் என்று கூறினோம்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியான முஸ்லிம் தலைமை நான் தான் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் காத்தான்குடியில் தெரிவித்திருந்தார். அதனை நானும் மறுக்கவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தான் அதற்கு தகுதியானவர். அவ்வாறெனில் ஏன் ஹக்கீம் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை? தலைவர் அஸ்ரப் இருந்திருந்தால் நிச்சயம் அவர் போட்டியிட்டிருப்பார். ஒருவரும் முன்வராத நிலையில் அந்த மாபெரும் பொறுப்பை நான் சுமக்க முன்வந்தேன்.
ஜே.வி.பி. தனித்து தேர்தலில் போட்டியிடுவதால் பிரதான வேட்பாளர் இருவருக்கும் பெறும்பான்மை வாக்குகளை பெறுவது சாத்தியமற்றது. அவ்வாறான சூழ்நிலையில் நாங்கள் தனித்து நின்று இரண்டரை இலட்சம் வாக்குகள் பெறும் பட்சத்தில் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி நாங்கள் தான்.– என்றார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts