பிராந்தியம் | குற்றம் | 1970-01-01 05:30:00

த.தே .கூவுடன் பேசி தவறிழைத்த சஜித்.

மிஸ்பாஹுல் ஹக்

ரணில், சஜித் மோதல் உக்கிரமடைந்துள்ளமை யாவரும் அறிந்ததே. இரு அணியினரும் சிறப்பான வியூகங்களை வகுத்து மோதிக்கொண்டிருக்கின்றனர். சஜித்திடமிருந்து பேயாட்டத்தையும், ரணிலிடமிருந்து நிதானமான வியூகங்களையும் அவதானிக்க முடிகிறது. இப்போது நடக்கும் சில விடயங்களை அவதானிக்கும் போது, சஜித் ரணிலின் நரித் தந்திரத்தின் முன் இராஜதந்திர தோல்வியை தழுவிக்கொண்டிருக்கின்றார் என்றே எண்ணத் தோன்றுகிறது. கூட்டம் சேர்த்தவரெல்லாம் வெற்றி பெற்றிட இயலுமா?

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால், சஜித் கிளம்பியடிப்பார். அவரை எப்படி மிதித்து அடக்க வேண்டுமென, இத்தனை காலமும் ரணில் சிந்திக்காமல் இருந்திருக்க மாட்டார். அந்த திட்டங்களில் ஒன்று தான், கூட்டணி அமைத்த பின்பே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என ரணில் கூறியிருந்தமையாகும். இதன் சூட்சுமம் அறிந்த சஜித், ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்பே கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என கூறியிருந்தார்.
இவ்வாறு ரணில் சஜிதை எதிர்கொள்ள கூறியிருந்தமையானது கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அழுத்தமாக அமைந்திருந்தது. வேட்பாளர் யாரென அறியாமல், எவ்வாறு கூட்டணி அமைப்பதென்ற பொது மக்களின் சிறிய கூட்டணி கட்சிகளை நோக்கிய விமர்சனங்கள் ரணிலின் இந் நிலைப்பாட்டை தளர்வடையச் செய்ததில் பிரதான பங்காற்றியிருந்ததெனலாம். இந்த ரணிலின் பொறியில் அகப்படாது, சஜித் இலகுவாக தப்பித்திருந்தார்.
இந்த ரணிலின் வியூகத்திலிருந்து சஜித் தப்பித்திருந்தாலும், த.தே.கூவின் சம்மதத்தை பெறுமாறு இறுதியாக ரணில் எய்த அம்பில் வீழ்த்தப்பட்டுள்ளார். ஐ.தே.க சார்பாக சஜித் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், வேறு வழியின்றியே த.தே.கூவானது சஜிதை ஆதரித்திருக்கும். ஓரிரு நிபந்தனைகளை விதித்திருப்பார்கள். அதனை வழங்குவதா, இல்லையாவென தேர்தலின் பிறகு பார்த்துக் கொள்ளலாமல்லவா? இதுவரை வந்தவர்களெல்லாம் வாக்குறுதியளித்தை வழங்கியுள்ளார்களா? ஏமாறாதவர்களா? ஏமாற்றாதவர்களா? த.தே.கூவுடன் சஜித் பேச்சுக்கு சென்றால், அவர்களுக்கு பாரிய பேரம் பேசும் பலம் கிடைக்கும். தங்களது டிமான்டை காட்டுவார்கள். அவர்கள் கேட்பதற்கு உடன்பட முடியாது. உடன்பட்டால் கச்சையும் அவிழ்ந்துவிடும். இவ்வாறிருக்கையில் சஜித் த.தே.கூவுடன் பேச்சுக்கு சென்றமை தவறானதொரு அணுகுமுறை. இதனால் தான் என்னவோ, சம்மந்தன் சஜிதை ஒரு சிறு பிள்ளையாக சுட்டிக்காட்டியிருந்தார்.
கன்னியா வெந்நீரூற்று பிரச்சினை சஜிதின் அமைச்சோடு நேரடியாக தொடர்புடைய விடயம். இதில் த.தே.கூவை சஜித் சிறிதேனும் அனுசரித்து சென்றிருக்கவில்லை. அவர் தன்னை முழு பௌத்தனாக வெளிக்காட்டியிருந்தார். இந்த பிரச்சினைக்குள் த.தே.கூவானது சஜிதை மக்கள் வெளியில் இழுக்காது காப்பாற்றியிருந்தாலும், உள்ளத்தில் ஒரு கறுப்பு புள்ளியை இட்டே வைத்திருந்தது. இவ் விடயத்தில், அவர்கள் காலடியில் இவர் சென்றால், அவர்கள் என்ன செய்வார்கள், செய்ய வேண்டும்?
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியை களமிறக்கி வெற்றியீட்டச் செய்ததில் த.தே.கூவானது பெரும் பங்காற்றியிருந்தது. இருந்தும் சாதித்தது ஏதுமில்லை. யாரோ இளநீர் அருந்த, மீண்டும் கோம்ப மட்டை சுமக்க இயலாது. சஜித் மீது ஏற்கனவே த.தே.கூவிற்கு அவ நம்பிக்கையுள்ளது. அதே நேரம் இறுதியாக அமையப்பெற்ற ஆட்சியில் த.தே.கூ நேரடியாக பங்குகொள்ளாது போனாலும், அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கும் பலம் ரணிலால் வழங்கப்பட்டிருந்தது. வடக்கு, கிழக்கு விடயங்களில் உயரிய அதிகாரம் த.தே.கூவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இவரைப் போன்ற ஒருவரை விட்டு விட்டு, வேறு யாரை த.தே.கூ தேர்ந்தெடுக்கப் போகிறது. அறியாதவனை விட, அறிந்தவன் எவ்வளவோ மேலல்லவா?
சஜித் த.தே.கூவை சந்திந்து பேச்சு வார்த்தை நடாத்தியது தோல்வியில் முடிவடைந்திருந்தது. இந் நேரத்தில் த.தே.கூவானது சஜிதையோ, ரணிலையோ ஆதரிக்கும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாதென்பதை ஊகிக்க இயலாதளவு சஜித், தனது அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு தனித்துவ தன்மை கொண்ட கட்சி அவ்வாறு செயற்படாது. அவ்வாறு செயற்படுவதற்கான சூழ் நிலையும் தற்போதில்லை. இதனை ஏன் சஜித் சிந்திக்காது செயற்பட்டார்?
இது ஐ.தே.கவின் உள் வீட்டு பிரச்சினை. இதற்குள் மூக்கை நுழைக்காது தவிர்ப்பதே உசிதமானதென்பதை அறியாதளவு த.தே.கூ அரசியல் வாதிகள் முதிர்ச்சியற்றவர்களுமல்ல. எந் நம்பிக்கையில் த.தே.கூ சஜிதின் பின்னால் செல்லும். என்ன பலம் அவரிடமுள்ளது.
ஐ.தே.கவுக்குள்ள மிகப் பெரிய பலம் சிறுபான்மை மக்கள் வாக்கென்பது உலகமறிந்த விடயம். ஐ.தே.கவானது சிறுபான்மை மக்களை, பிரதான சிறுபான்மை கட்சிகளை புறக்கணித்த திட்டத்தை ஏறெடுத்தும் பார்த்திட இயலாது. சஜிதை த.தே.கூ ஆதரிக்காது என்ற வகையிலான கருத்து பரவினாலே, சஜிதை ஜனாதிபதி வேட்பாளராக முன் வைப்பவர்கள் மனம் தளர்ந்துவிடுவார்கள். அவர் இன்றைய சூழ் நிலையில் பொருத்தமற்ற வேட்பாளராக வெளிக்காட்டப்படுவார். இது சஜிதுக்கு பாரிய இராஜதந்திர தோல்வியாக அமையும். அவரும் பேச்சு வார்த்தைக்கு சென்றுவிட்டு " இவர்களின் கோரிக்கைக்கு அடிபடியேன் " எனக் கூறி நெஞ்சை நிமிர்த்தினால், இன்னுமின்னும் அவர் தோல்வியை நோக்கியே காய் நகர்த்துகிறார்.

சஜித் ரணிலின் நரித்தந்திரத்தை அறியாது த.தே.கூவுடன் பேச்சுக்கு சென்று பாரிய இராஜதந்திர தவறிழைத்துள்ளார். வாய் கிழிய கத்துபவனின் உள்ளத்தில் ஏதுமிருக்காது. திட்டங்கள் அனைத்தும் பகிரங்கமானது. அமைதியாக இருப்பவனே ஆபத்தானவன். அடுத்து என்ன செய்யப் போகிறான் என்பதை சற்றேனும் ஊகிக்க முடியாது. ரணிலிடம் இராஜதந்திர தோல்வியை நோக்கி நெருங்குகிறார் சஜித்.
 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts