பிராந்தியம் | சமூக வாழ்வு | 2019-08-11 14:07:06

முஸ்லிம்கள் நிம்மதியாக வாழும் சூழல் ஏற்பட பிராத்திப்போம்..!  முஸ்லிம் விவகார அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் மௌலானாவின் பெருநாள் வாழ்த்து


நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் மீது சூழ்ந்திருக்கின்ற இனவாதம் துடைத்தெறியப்பட்டு, முஸ்லிம்கள் நிம்மதியாக வாழும் சூழல் ஏற்பட இப்புனிதத் திருநாளில் வல்ல இறைவனைப் பிராத்திப்போம் என முஸ்லிம் சமய, கலாசார, தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசாரச் செயலாளருமான அஸ்வான் ஷக்காப் மௌலானா தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இலங்கை முஸ்லிம்களாகிய நாம் எமது இஸ்லாம் மார்க்கம் காட்டும் உண்மையான வழிமுறையில் நின்று எம்மிடையே காணப்படும் கருத்து முரண்பாடுகளை புறந்தள்ளி, பரஸ்பரம் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். தாய் நாட்டின் மீது பற்றுக்கொள்வதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதற்காக நாம் உழைக்க வேண்டும்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று அரசியல், பொருளாதார, சமய ரீதியாக நிந்திக்கப்பட்டு, பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளோம். இதனால் முஸ்லிம்கள் பெரும் பீதியுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் முஸ்லிம்களையும் புனித இஸ்லாம் மார்க்கத்தையும் இறைவன் நிச்சயம் பாதுகாத்து, ஸ்திரப்படுத்துவான் என்று நாம் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம். அதற்கான முயற்சிகளை பக்குவமாக முன்னெடுப்பதே இன்றைய தேவையாகும். ஏனைய சமூகத்தினர் எம்மை குற்றம் சுமத்துகின்ற அளவுக்கு இனியும் எமது செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது.

அதேவேளை அநியாயமாக கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்துடன் எவ்வித தொடர்புமில்லாத எமது அப்பாவி முஸ்லிம் சகோதரர்களின் விடுதலைக்காக இப்புனிதமிகு நாளில் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

இன்று தியாகத்திருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம் நெஞ்சங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts