பிராந்தியம் | சமூக வாழ்வு | 2019-05-22 07:52:20

மருதமுனையில் இராணுவ அதிகாரிகளுக்கும் ஊர் பள்ளிவாசல்களின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பும் இப்தார் நிகழ்வும்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

முஸ்லிம் சமூகத்தின் கலாசார நிகழ்வுகளில் பங்குபற்றுவதால்- அவர்களின் கலாசார விழுமியங்களை அறிந்து கொள்ள முடிகிறது என கல்முனை பிராந்திய இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் என்.ஆர்.தர்மசேன தெரிவித்தார்.

மருதமுனை மஸ்ஜிதுல் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை ஏற்பாடு செய்த இராணுவ அதிகாரிகளுக்கும் ஊர் பள்ளிவாசல்களின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பும் இப்தார் நிகழ்வும் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.எஸ்.எம்.மௌலான தலைமையில் (20) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராணுவ கட்டளைத்தளபதி இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றும் போது, முஸ்லிம் சமூகத்தவர்களின் கலாசார நிகழ்வுகளில் அடுத்த சமூகத்தவர்கள் கலந்து கொள்ளாமல் அல்லது பங்குபற்றாமல் விடுவதால் இரண்டு சமூகத்தவர்களுக்குமிடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்கின்றது. நாம் இதற்கு முன்னரும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளோம். இவ்வாறு கலந்து கொள்வதால் முஸ்லிம் சமூகத்தின் கலாசார விழுமியங்களை அறிந்து கொள்ள முடிகிறது. நாம் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். எமது எதிர்கால சந்ததிகள் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ வேண்டும். அதற்காகத்தான் நாம் கஸ்டப்படுகிறோம். 

பல்லின மக்கள் மற்றும் சமூகத்தவர்கள் வாழும் எமது நாட்டில் நாம் எல்லா சமூக சமய கலாசார விழுமியங்களையும் மதிக்கிறோம். முஸ்லிம் சகோதரர்கள் தமது கலாசாரங்கள், கடமைகளை சிறப்பாக செய்ய முடியும் அதற்கு நாம் ஒருபோதும் தடையானவர்கள் அல்ல. எல்லோருக்கும் அல்லாஹ்வின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் என்றார்.

பள்ளிவாசல் நிருவாகத்தினரால் முஸ்லிம் சமூகத்தவர்கள் மீது கடமையாக்கப்பட்ட ஐவேளை தொழுகை,நோன்பு, சக்காத், ஹஜ் போன்ற இஸ்லாமிய கடமைகள் பற்றியும் சுருக்கமாக தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இந்த நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.லத்தீப், ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம். கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல் உட்பட ஊர் பிரமுகர்கள், கல்வியலாளர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வுகளை அறிவிப்பாளரும் அதிபருமான ஏ.முஹம்மட் அன்சார் தொகுத்து வழங்கினார். இப்தார் விசேட மார்க சொற்பொழிவை அஷ்செய்க் மௌலவி என்.ஜி அப்துல் கமால் (இஸ்லாஹி) நிகழ்த்தினார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts