விளையாட்டு | விளையாட்டு | 2022-01-27 17:37:17

சாய்ந்தமருது இளவன் ஹீரோஸ் 10 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கியது

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சஹ்ரியன் விளையாட்டுக்கழகத்தின் 22வது ஆண்டை முன்னிட்டு சாய்ந்தமருது இளவன் ஹீரோஸ் விளையாட்டு கழகத்துடனான சிநேகபூர்வ 18 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து கிரிக்கட் போட்டி சாய்ந்தமருது பொதுமைதானத்தில் இன்று (25) மாலை நடைபெற்றது.

ஈ.சீ.எம். நிறுவனத்தின் பிரதானியும், நாபீர் பௌண்டஷன் தவிசாளருமான பொறியியலாளர் உதுமான்கண்டு நாபிரின் அனுசரணையில் நடைபெற்ற “நாபீர் கிண்ண” சிநேகபூர்வ கடினபந்து கிரிக்கட்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சாய்ந்தமருது இளவன் ஹீரோஸ் விளையாட்டு கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 17.1 பந்துவீச்சு ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை பெற்றனர். 106 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது சஹ்ரியன் விளையாட்டுக் கழகம் ஆரம்பம் முதல் தடுமாற்றத்தை சந்தித்திருந்தாலும் 05 வது விக்கட்டுக்காக களமிறங்கிய பாயிஸ் 27 பந்துகளை எதிர்கொண்டு 35 ஓட்டங்களை பெற்று அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த போதிலும் அவரது போராட்டம் விணானதுடன் 18 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களை மட்டும் பெற்று 10 ஓட்டங்களினால் சாய்ந்தமருது இளவன் ஹீரோஸ் விளையாட்டு கழகத்திடம் சாய்ந்தமருது சஹ்ரியன் விளையாட்டுக்கழகத்தினர் வெற்றிவாய்ப்பை பரிதாபமாக பறிகொடுத்தனர்.

41 பந்துகளில் 37 ஓட்டங்களை பெற்ற இளவன் ஹீரோஸ் விளையாட்டு கழக வீரர் உவைத் ஆட்டநாயகனாக தேர்வானார். இந்நிகழ்வில் ஈ.சீ.எம். நிறுவனத்தின் பிரதானியும், நாபீர் பௌண்டஷன் தவிசாளருமான பொறியியலாளர் உதுமான்கண்டு நாபிரின் புதல்வர் என்.எம். நஸீம், ஈ.சீ.எம். நிறுவனத்தின் இணைப்பாளர் ஏ.எல். ஹியாஸ், அம்பாறை மாவட்ட கிரிக்கட் சம்மேளனத்தின் சுற்றுப்போட்டிகளுக்கான தவிசாளர் ஏ.எம். நளீம், சாய்ந்தமருது கிரிக்கட் சங்கத்தின் தலைவர் டீ.கே. ஜலீல், சாய்ந்தமருது சஹ்ரியன் விளையாட்டுக்கழக முகாமையாளர் கலாநிதி றியாத் ஏ மஜீத், பொருளாளர் தொழிலதிபர் நாஸர், சாய்ந்தமருதின் ஏனைய விளையாட்டுக்கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது 33 வருடகாலமாக பிரதேச கிரிக்கட் வளர்ச்சிக்கும், சாய்ந்தமருது சஹ்ரியன் விளையாட்டுக்கழகத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து இப்போட்டியுடன் ஓய்வை அறிவித்த சாய்ந்தமருது சஹ்ரியன் விளையாட்டுக்கழகத்தின் மூத்த நிர்வாகி எம்.எச்.ஏ. ஹாலீதின் சேவைநலனை பாராட்டி வீரர்கள் மற்றும் அதிதிகளினால் கௌரவிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts