உள்நாடு | அபிவிருத்தி | 2020-02-12 22:08:52

கல்முனையில் ரயில் ஆசன முற்பதிவு நிலையத்தை மீண்டும் செயற்படுத்தவும்..!

கல்முனையில் இயங்கிய ரயில் ஆசன முற்பதிவு நிலையத்தை, மீண்டும் திறந்து செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் யூ.எல்.எம். பைஸர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

35 வருடங்களுக்கு முன்னர், மட்டக்களப்பு ரயில் நிலையத்தின் ஆசன முன் பதிவு நிலையமொன்று, கல்முனையில் இயங்கியது. 1983ஆம் ஆண்டின் பின்னர் கிழக்கில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக, அம்பாறை மாவட்ட மக்கள் கொழும்புக்குச் செல்வதற்காக, மட்டக்களப்பு ரயில் நிலையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொண்டனர்.

இதன் காரணமாக, கல்முனையில் இயங்கிய மட்டக்களப்பு ரயில் நிலையத்துக்கான முன் ஆசனப் பதிவு நிலையம் மூடப்பட்டது.

எனினும், தற்போது அம்பாறை மாவட்டத்திலிருந்து அதிகமான மக்கள் கொழும்புக்குச் செல்வதற்கு மட்டக்களப்பிலிருந்து இடம்பெறும் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் ரயில் பயணத்துக்காக ஆசனத்தைப் பதிவு செய்து கொள்வதில் அம்பாறைப் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குறிப்பாக அரச ஊழியர்கள் பெரும் சிரமத்ததை எதிர்நோக்குகின்றனர்.

ஏனெனில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச ரயில் ஆணைச்சீட்டின் மூலம் ரயில் பயணத்துக்கான ஆசனத்தை முன் பதிவு செய்துகொள்ள முடியாமல் உள்ளனர்.

மட்டக்களப்பு ரயில் நிலையத்துக்குச் சென்று முன் ஆசனப்பதிவை மேற்கொள்ளும்போது, நேர விரையத்தையும் வீண் செலவு ஏற்படுவதோடு, சில சந்தர்ப்பங்களில் ஆசன பதிவு மேற்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதாகவும், இதனால் ஏமாத்தத்துடன் திரும்ப வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே கல்முனையில் இயங்கிய ஆசன முன் பதிவு நிலையத்தை மீண்டும் கல்முனையில் திறந்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, அம் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts