உள்நாடு | கல்வி | 2019-11-01 15:47:49

தேசிய மீலாத் போட்டியில் கல்முனை மஹ்மூத் கல்லூரி மாணவி ஷைரின் மௌலானா தேசிய மட்டத்தில் முதலிடம்

தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட சிரேஷ்ட மாணவியர் பிரிவில் ஆங்கில மொழிமூல பேச்சுப் போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரின் இனாம் மௌலானா தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

கல்வி அமைச்சின் அனுசரணையுடன் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2019-10-26ஆம் திகதியன்று கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள பாத்திமா கல்லூரியில் இப்போட்டி நிகழ்ச்சி நடாத்தப்பட்டிருந்தது.

மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றிருந்த ஒன்பது மாணவிகள் தேசிய மட்டப்போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.

இதன் பிரகாரம் இப்போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரின் இனாம் மௌலானா முதலிடத்தையும் மாவனல்ல சுலைமானியா கல்லூரி மாணவி எம்.எம்.இப்ரத் பானு இரண்டாமிடத்தையும் கொழும்பு லிண்ட்ஸே மகளிர் கல்லூரி மாணவி சஹாரா ரைஹானா மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கின்ற பாத்திமா ஷைரின் இனாம் மௌலானா, கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்ததுடன் கடந்த வருடம் ஜீ.சி.ஈ.(சா/த) பரீட்சையில் 09 A சித்திகளைப் பெற்றிருந்தார்.

அத்துடன் பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் முதலிடம் பெற்று, கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும், கடந்த வருடம் தேசிய விஞ்ஞான மன்றத்தினால் அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் இம்மாணவி இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இவர் கல்முனை கடற்கரைபள்ளி வீதியை சேர்ந்த இனாம் ஷக்காப் மௌலானா மற்றும் மௌலவி அப்துல் கனி மஜ்மலா தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts