உள்நாடு | அபிவிருத்தி | 2019-09-16 18:45:49

கொழும்பு தாமரை கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

பாறுக் ஷிஹான்

தெற்காசியாவின் மிகவும் உயரமானக் கோபுரமாகக் கருதப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திங்கட்கிழமை(16)  மாலை 5 மணியளில்  திறக்கப்பட்டு  மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு தாமரைக் கோபுரமானது  வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் அலைவரிசை ஒலிபரப்பினை எண்மான அடிப்படையில் ஒரே இடத்தில் இருந்து மேற்கொள்ள வசதி ஏற்பட்டுள்ளதுடன் 356 மீற்றர் உயரமான இந்த தாமரைக் கோபுரம் 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த கோபுரத்தின் நிர்மாணப் பணிக்கான அனைத்து ஆலோசனை சேவைகளையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் வழங்கி இருந்தனர். இந்த கோபுரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் மாடிகள் வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரி ஒலிபரப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.3ம் மற்றும் 4ம் மாடிகள் நிகழ்வுகள் மற்றும் விழா மண்டபங்களாக உருவாக்கப்பட்டுள்ளன

கொழும்பு  டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத் தாமரை  கோபுரத்தின் நினைவாக  இலங்கை தபால் திணைக்களத்தினால் முத்திரை மற்றும் தபால் உறை வெளியிடும் நிகழ்வு இடம்பெற்றது.இந்த முத்திரை 45.00 ரூபா பெறுமதியில் வெளியிடப்பட்டதுடன்  இதனை கலைஞர் பசுபிட்டியேஜ் இசுரு சதுரங்கா உருவாக்கியுள்ளார்.

இந்நிகழ்விற்கு  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  ,எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ வரவில்லை.ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள்,  சீன தூதுவர், உட்பட வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

சீனாவின் எக்சிம் வங்கிக் கடனின் உதவியுடன் 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இக்கோபுரத்தை அமைக்கும் பணிகள் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இக்கோபுரமானது பிரான்ஸின் 300 மீற்றர் உயரமான ஈபில் கோபுரத்தினை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts