உள்நாடு | சமூக வாழ்வு | 2019-08-11 13:58:19

இன்றைய எதிரிகள் நாளை எமது நேச சக்திகளாக மாறலாம்..! -மு.கா. செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பரின் பெருநாள் வாழ்த்து

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாட்டில் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்ற சக்திகள், நாளை எமக்கான நேச சக்திகளாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமலில்லை. முஸ்லிம்கள் இறைவன் மீது முழுமையான நம்பிக்கை வைத்து ஈமானிய பலத்துடன் செயற்படுகின்றபோது நிச்சயமாக இது விடயத்தில் எம்மால் வெற்றி பெற முடியுமாக இருக்கும்" என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய சவால் இன்னும் நிறைவுறாத சூழ்நிலையிலேயே தியாகத் திருநாளை கொண்டாடுகின்றோம். ஏப்ரல்-21 சம்பவத்திற்கு பின்னரான சவாலைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னோக்கியதான மற்றொரு சவாலை எதிர்நோக்கியுள்ளோம். இத்தகைய சவால்களுக்கு மத்தியில் வாழ்வதே இலங்கை முஸ்லிம்களின் விசேட அம்சமாக இருப்பதை மறந்து விடக்கூடாது.

சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் போத்துக்கீசரால் முஸ்லிம்கள் இரவோடிரவாக அடித்து விரட்டப்பட்டபோது அன்றைய சிங்கள அரசர்கள் எங்களுக்கு தஞ்சம் கொடுத்தார்கள். சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் எமது நாட்டில் ஆங்கிலேயர் படையெடுத்தபோது, சிங்கள அரசர்களை பாதுகாப்பதற்காக முஸ்லிம்கள் போராடினார்கள். சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் சிங்களப் பேரினவாதிகளினால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோது ஆங்கிலேயர் எங்களுக்கு உதவினார்கள். பின்னர் நாட்டின் சுதந்திரத்திற்காக சிங்கள சமூகத்துடன் இணைந்து முஸ்லிம்கள் போராடினார்கள்.

இவ்வாறு சரித்திரங்களைப் புரட்டிப்பார்க்கப்போனால் எங்களுக்கு எதிரிகளாக இருந்தவர்களே பிற சந்தர்ப்பங்களில் எங்களுக்கு பக்கபலமாக மாறியிருப்பதையும் அவர்களுடன் நாம் கைகோர்த்து செயற்பட்டிருப்பதையும் அறிய முடிகிறது. அவ்வாறே இன்று எங்களுக்கு எதிராக இருக்கின்ற சக்திகளை அல்லாஹ் எமக்குரிய நேச சக்திகளாக மாற்றித்தருவான் என்ற நம்பிக்கை நம்மிடையே வர வேண்டும். 

ஆகையினால் எவருக்கும் அஞ்சாமல், எவரையும் நிரந்தர விரோதிகளாக பார்க்காமல், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு, பொறுமை, சகிப்புத்தன்மையுடன் முடியுமான தியாகங்களைச் செய்து, ஈமானைப் பலப்படுத்திக் கொள்வோமாக. அதற்காக இன்றைய தியாகத்திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம்.

இவ்வேளையில், அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts