🖋️Hanan
“ஈரான் ஒருபோதும் சரணடையாது” என்ற அதி உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ் அலி கொமெய்னியின் அறிவிப்பு, மத்திய கிழக்கு அரசியல் சூழலில் மீண்டும் தீவிரமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் உணர்ச்சிப்பூர்வ முழக்கம் அல்ல; ஈரானின் வெளிநாட்டு கொள்கை, பாதுகாப்பு நோக்கு மற்றும் அரசியல் உளவியலை பிரதிபலிக்கும் ஒரு தெளிவான அரசியல் அறிவிப்பாகும்.
மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீது செலுத்தும் அரசியல் மற்றும் இராணுவ அழுத்தங்களுக்கு பதிலாகவே இந்த உரைகள் வெளியாகியுள்ளன. “திணிக்கப்பட்ட சமாதானத்தையோ அல்லது போரை யோ ஏற்கமாட்டோம்” என்ற கூற்று, ஈரான் தன் இறையாண்மையில் எந்தவொரு சமரசத்துக்கும் தயாரில்லை என்பதைக் காட்டுகிறது. இது ஒரு நாடாக தன் மரியாதையை காக்கும் முயற்சியா, அல்லது பதற்றத்தை மேலும் தூண்டும் அரசியல் யுக்தியா என்ற கேள்வி இங்கு எழுகிறது.
இஸ்ரேல் குறித்த கடுமையான மொழியும், வான்வெளி அத்துமீறல்களுக்கு மன்னிப்பு இல்லை என்ற அறிவிப்பும், மத்திய கிழக்கில் புதிய மோதல்களுக்கு வழி வகுக்கக் கூடும். வார்த்தைகள் ஆயுதங்களாக மாறும் அபாயம் நிறைந்த இந்த சூழலில், ஒரு தவறான கணிப்பு கூட பேரழிவை ஏற்படுத்தலாம்.
அதே நேரத்தில், ஈரானின் உள்ளக பொருளாதார நெருக்கடிகளும், மக்கள் அதிருப்தியும் இந்த கடும் நிலைப்பாட்டின் பின்னணியில் உள்ளதா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. வெளிநாட்டு எதிரிகளை முன்னிறுத்தி உள்ளக ஒற்றுமையை வலுப்படுத்துவது உலக அரசியலில் புதிய யுக்தி அல்ல.
எனினும், தொடர்ச்சியான அச்சுறுத்தல் மொழிகள் சமாதானத்திற்கு வழிவகுக்காது. மத்திய கிழக்கு ஏற்கனவே போர்களால் சிதைந்த பிராந்தியம். இந்நிலையில், அனைத்துத் தரப்புகளும் பொறுப்புடன் பேசுவதும், தூதரக பாதைகளை திறந்துவைப்பதும் காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
ஈரான் சரணடையாது என்றாலும், பிராந்திய அமைதி சரணடையக் கூடாது என்பதே உலகின் எதிர்பார்ப்பு.

