
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் குதித்துள்ளார். இவரது மனைவி சங்கீதா ஒரு இலண்டன் வாழ் தமிழ்ப் பெண்மணி. இலங்கையை பூர்வீமாக கொண்ட இவர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து, பின்னாளில் அவரை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 1996ஆம் ஆண்டு ‘பூவே உனக்காக’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்த நேரம் விஜய்யைப் பாராட்டுவதற்காக இலண்டனில் இருந்து சென்னை வந்திருந்தார் சங்கீதா. படப்பிடிப்பு தளத்தில் விஜய்யைச் சந்தித்த சங்கீதா, தன்னை ஒரு ரசிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டார். சங்கீதாவின் குணாதிசயங்கள் விஜய்யின் பெற்றோருக்குப் பிடித்துப் போகவே, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 1999-ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் சஞ்சய் தற்போது இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அதேபோல் பெண் குழந்தையான திவ்யா சாஷா அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகிறார். பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளாத சங்கீதா, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையையும் குழந்தைகளையும் மிகச்சிறப்பாக கவனித்து வந்தார்.
கடந்த சில காலங்களாக சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் தென்படாததால் சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் பரவின. இருப்பினும், அவர் தனது குழந்தைகளின் கல்வி மற்றும் வெளிநாட்டுப் பணிகளுக்காக அங்கேயே தங்கியிருப்பதாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தான் சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்தார். அதனை கண்டுபிடித்த பிறகு விஜயால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு வரும் மார்ச் 20-ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது. அப்போது விஜய்யும் சங்கீதாவும் ஆஜராவார்கள் எனத் தெரிகிறது.