பிராந்தியம் | கல்வி | 2023-10-07 01:47:03

கல்முனை ஸாஹிறா உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு!

( நூருல் ஹுதா உமர் )

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகளுக்கும், கல்லூரியின் உயர்தரப் பிரிவுகளின் ஆசிரியர்களுக்குமிடையிலான சந்திப்பும், உயர்தரப் பிரிவுகளின் எதிர்கால பெறுபேறுகளை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடலும் வியாழக்கிழமை (05) கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவின் பல்லூடக அறையில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், உயர்தரப் பிரிவுகளுக்குப் பொறுப்பான வலய அதிபரும் கல்லூரியின் பிரதி அதிபருமாகிய ஏ.எச்.எம். அமீன் உட்பட உயர்தர விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் கலை வர்த்தக பிரிவுகளின் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்களும், பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான், உள்ளிட்ட பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாகவும், தற்போதைய மாணவர்களின் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக உயர்தரப்பிரிவுகளில் கற்பிப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பட்டியல்படுத்தப்பட்டதுடன், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன.

ஈற்றில் உயர்தரப் பெறுபேறுகளை மேம்படுத்தும் நோக்கில், ஒரு செயற்குழு தாபிக்கப்பட்டதுடன், இரு வாரகாலங்களுக்கிடையில், உயர்தரத்திலுள்ள ஒவ்வொரு பாடத்திற்குமான கற்பித்தல் திட்டமிடல்களை இக்குழுவினூடாகப் பெறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் உசார்த்துணை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்பை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts