பிராந்தியம் | கல்வி | 2023-10-07 01:42:44

கல்முனைப் பிராந்திய அதிபர் ஆசிரியர்களுக்கு பாடசாலை சுகாதார மேம்பாடு தொடர்பான செயலமர்வு!

நூருல் ஹுதா உமர் 

பாடசாலை மாணவர்களின் உணவு பாதுகாப்பு மற்றும் போசனையை கருத்தில் கொண்டு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு பாடசாலை சுகாதார மேம்பாடு தொடர்பிலான செயலமர்வு வியாழக்கிழமை (5) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் சுற்றுச் சூழல், தொழில், சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்புப் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம். பௌஸாத் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை கல்வி வலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அதிபர்கள், சுகாதார மேம்பாட்டுக் குழு ஆசிரியர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் எம்.பீ.அப்துல் வாஜித், பிராந்திய பொது சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம்.ஹில்மி, பிராந்திய சுகாதார கல்வி உத்தியோகத்தர் எம்.ஜே.எம்.பைறூஸ் பிராந்திய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் லபீர் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு குறித்த விடயம் தொடர்பாக விளக்கமளித்தனர்.

இதன்போது பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.எம்.எஸ்.இர்ஷாத் கல்முனை தெற்கு, கல்முனை வடக்கு, காரைதீவு மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கற்றல் மேம்பாட்டுக்கு சுகாதாரமானதும் போசாக்குமிக்கதுமான உணவுகள் மிகவும் அத்தியாவசியமானது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சில பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் போசாக்கற்றதும் தரமற்றதுமான உணவுகளே விற்கப்படுகின்றன. இதனையே எமது பிராந்திய மாணவர்கள் உட்கொள்கின்றனர். இவ்வாறான உணவுகளினால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.

இந்த விடயம் தொடர்பில் சகல தரப்பினரும் அவதானம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். இல்லையெனில் ஆரோக்கியமற்ற ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆரோக்கியமற்ற சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டு அவர்களுக்கு கல்வி போதித்து எந்தவொரு முன்னேற்றத்தினையும் அடைய முடியாது.

ஆரோக்கியத்தை அடகு வைத்து விட்டு நாம் கற்கின்ற கல்வி சம்பாதிக்கின்ற பணம் ஆகியன எந்த பயனையும் பெற்றுத்தராது. போசாக்கான உணவுகளை உண்ணுவதற்கும் அதன் நன்மைகள் தொடர்பாகவும் மாணவர்களுக்கு எத்தி வைத்து அவர்களை வழிகாட்டுவது பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts