உள்நாடு | சமூக வாழ்வு | 2023-10-05 08:04:23

காணி அபகரிப்பு செயற்பாடுகள் உடன் நிறுத்தப்படவேண்டும் - பாராளுமன்றில் எம்.எஸ் தௌபீக் எம்.பி தெரிவிப்பு!

(எஸ். சினீஸ் கான்)

திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் காணிப்பிரச்சினையானது எல்லா பிரதேசத்திலும் காணப்படுகிறது. சென்றவாரம் புல்மோட்டை பிரதேசத்தில் அம் மக்களுக்கு சொந்தமான காணிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானி வெளியிட்டு அக்காணிகளை அபகரிப்பதற்கு முயற்சிப்பதாகவும் சட்டவிரோத காணி அபகரிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்தவேண்டும் என திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் செவ்வாய்க்கிழமை (3) பாராளுமன்றத்தில் உரையாற்றும் 

போது தெரிவித்தார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், இவ்வாறான சட்டவிரோத காணி அபகரிப்புக்கள் தொடர்பில் நாங்கள் காணி அமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி என எல்லா உயர்மட்டங்களுக்கும் இப்பிரச்சினையை கொண்டு சென்றும் இதனை நிறுத்துமாறு கோரியும் இதுவரையில் எந்த பிரச்சினைகளும் தீர்க்கப்டவில்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றும் இப்பிரச்சினையை தீர்க்கமுடியவில்லையாயின் இதை நாங்கள் யாரிடம் சென்று தீர்ப்பது எனவும் கேள்வி எழுப்பினார்.

இம்மக்கள் யுத்தம், சுனாமியினால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற அப்பாவி மக்களுடைய காணிகளே அபகரிக்கப்பட்டுள்ளது. இப்படியான அநியாயங்கள் நடக்கின்ற போதும் சட்டம் சரியாக அமுல்படுத்தப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

அதேபோல், கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில காணிகள், முத்துநகர், கப்பல்துறை போன்ற காணிகளில் ஆரம்பத்தில் மக்கள் விவசாயம் செய்த போதிலும் பிறகு அது துறைமுக அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பல பிரச்சினைகள் காணப்படுகின்றது எனவும் இப் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்துத்தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts