பிராந்தியம் | மருத்துவம் | 2023-08-08 05:59:21

சுகாதார பராமரிப்பு நிலையங்களிலுள்ள கழிவுகளை முகாமை செய்யும் முயற்சியில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை!

நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக கல்முனை பிராந்திய பொது சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ.எம் ஹில்மி அவர்களினால் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை  முகாமைத்துவம் செய்வது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் சுகாதார பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சார்பில் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பி.ஏ வாஜித் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பிரிவு தலைவர்களும், வைத்திய அத்தியட்சகர்களும், சுகாதார வைத்திய அதிகாரிகளும், பிரதேச வைத்திய அதிகாரிகள் மற்றும் பொறுப்பு வைத்திய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில் கல்முனை பிராந்தியத்தில்  அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் குறித்த கழிவுகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி குறித்த திட்டத்தை விரிவுபடுத்தி அதன் ஊடாக பொறுப்பு வாய்ந்த முறைமை ஒன்றை கட்டியெழுப்புவதுடன் அது தொடர்பான வழிகாட்டல் மற்றும் சுகாதார உதவிகளை பொது சுகாதார பிரிவின் ஊடாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் கருத்திட்டத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்ட வள முகாமைத்துவம் செயறிட்டத்தின் கீழ் பெறப்பட்ட உபகரணங்கள் இதற்கென விசேடமாக பயன்படுத்தப்பட உள்ளதுடன் விரைவில் இக்கழிவுகளை அகற்றும் செயல் முறையை மேற்பார்வை செய்வதற்கென கள விஜயம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சுகாதார பராமரிப்பு நிலையங்களில் இக்கழிவு அகற்றும் இயந்திரப் பொறிமுறை அற்ற வைத்தியசாலைகளை கொத்தனியாக்கி இத்திட்டத்தை முகாமை செய்ய உள்ளதுடன் தனியார் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் தொற்று கழிவுகளை முகாமை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வெற்றிகரமான இத்திட்டத்தை ஏனைய பிராந்தியங்களிலும் எதிர்காலத்தில் அமுல்படுத்த உள்ளதாக  மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts