பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-08-08 05:42:36

கல்முனை மாநகர சபையில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட முகப்பு அலுவலகம்!

(ஏயெஸ் மெளலானா)

கல்முனை மாநகர சபையின் சேவைகளை மக்கள் இலகுவாக பெற்றுக் கொள்வதற்கும் வரிகள் மற்றும் சேவைக் கட்டணங்களை அசெளகரியம் எதுவுமின்றி இலகுவாகவும் விரைவாகவும் செலுத்துவதற்குமான வசதிகள் கொண்டதாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட முகப்பு அலுவலகம் (Front Office) ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் மக்கள் செலுத்திய வரிப்பணங்கள் மற்றும் சேவைக் கட்டணங்கள் சிலரால் கையாடல் செய்யப்பட்ட துரதிஷ்டமான சம்பவங்களையடுத்து மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்ற நம்பிக்கையீனம் களையப்பட்டு, இக்கொடுப்பனவுகள் ஒழுங்கு முறையாக அறவீடு செய்யப்பட்டு, முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் என்பதுடன் அவற்றைக் கொண்டு மக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவைகள் வழங்குவதற்கும் தற்போதைய மாநகர சபை நிர்வாகம் திடசங்கற்பம் பூண்டிருக்கிறது

கல்முனை மாநகர சபையில் இவ்வாறான முகப்பு அலுவலக முறைமை செயற்படுத்தப்படாமையே கடந்த காலங்களில் நிதி மோசடிகளும் முறைகேடுகளும் இடம்பெறுவதற்கு காரணமாக அமைந்திருந்தது.

இக்குறைபாட்டை நிவர்த்தி செய்து, வரி அறவீடுகளை ஒழுங்கு முறைப்படுத்துவதை இலக்காகக் கொண்டே எமது மாநகர சபையிலும் முகப்பு அலுவலகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதுவொரு புதிய விடயம் அல்ல என்கிற போதிலும் எமது மாநகர சபைக்கு இதுவொரு புத்தாக்க முயற்சியாகும்.

பொது மக்கள் நலன் கருதி, உள்ளுராட்சி மன்றங்களில் காரியாலய வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சபையின் வழிகாட்டலில் முகப்பு அலுவலக முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைவாகவே கல்முனை மாநகர சபையிலும் முகப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு வருகின்றது.

இதற்கென விஷேட செயலி (Software) ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அரச அங்கீகாரம் பெற்ற வயம்ப அபிவிருத்தி அதிகார சபை எனும் நிறுவனம் இச்செயலியை வடிவமைத்துள்ளது.

வங்கி முறைமையை ஒத்ததாக இச்சேவை அமையப்பெறவுள்ளது. வங்கி அட்டை மூலமும் ஒன்லைன் மூலமாக வீட்டில் இருந்தவாறும் மக்கள் தமது கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான வசதிகளைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தனிப்பட்ட முறையில் எவரும் நிதிக்கையாடலில் ஈடுபட முடியாதவாறு மிக நம்பகமானதும் பாதுகாப்பு மிக்கதாகவும் இச்செயலி அமையப் பெற்றிருக்கிறது.

இதன் மூலம் மக்கள் தமது வரிகளையும் சேவைக் கட்டணங்களையும் நேரடியாகவும் ஒன்லைன் மூலமாகவும் எவ்வித ஐயமுமின்றி மிக இலகுவாகவும் விரைவாகவும் செலுத்திக் கொள்ள முடியும். இதற்கு எமது மாநகர சபை நிர்வாகம் மிகவும் பொறுப்புடமையுடன் உத்தரவாதமளிக்கிறது.

மேலும், மாநகர சபையில் அமைக்கப்படுகின்ற முகப்பு அலுவலகம் மூலம் மாநகர சபையின் சேவைகள் வினைத்திறன் மிக்கதாக முன்கொண்டு செல்லப்படவுள்ளன.

இம்முகப்பு அலுவலகத்தில் மக்கள் குறைகேள் பிரிவும் செயற்படவுள்ளது. மாநகர சபையின் எந்தவொரு சேவை தொடர்பிலும், குறிப்பாக தெரு விளக்கு பராமரிப்பு, திண்மக் கழிவகற்றல், வடிகான் பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கும் அவற்றை நிவர்த்தி செய்து கொடுப்பதற்குமான கருமபீடங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் மக்கள் தமது முறைப்பாடுகளை வீட்டில் இருந்தவாறு மேற்கொள்வதற்கும் தீர்வுகளை அறிந்து கொள்வதற்குமான 'மங்கிவ்வா' எனும் செயலி (Software) ஒன்றையும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கல்முனை மாநகர சபையில் மிக விரைவில் முகப்பு அலுவலகம் செயற்படத் தொடங்கியதும் கல்முனை மாநகர மக்கள் அதன் பயன்களை அனுபவிக்க முடியும் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறியத் தருகின்றோம்- என்று கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தெரிவிக்கிறார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts