பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-07-28 05:55:13

கடல்சார் சூழல் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்!

(ஏயெஸ் மெளலானா)

கல்முனையின் கடல்சார் சூழல் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்  புதன்கிழமை(26) கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஒருங்கிணைப்பில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகள் மாசுபடுத்தப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

கடற்கரையோரப் பகுதிகளில் அன்றாடம் சேர்கின்ற திண்மக்கழிவுகள் மாநகர சபையினால் தினசரி கிரமமாக அகற்றப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய மாநகர ஆணையாளர், பொது மக்கள் கடற்கரை பகுதிகளில் குப்பை கொட்டுவதைத் தவிர்ந்து நடக்கும் வகையில், அவர்கள் விரும்பக் கூடிய எழில்மிகு இடங்களாக அவற்றை மாற்றியமைப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை அனுசரணை வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கேற்ப பொருத்தமான திட்டமொன்றை வரைந்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைமையகத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக அம்பாறை மாவட்ட உதவி கடல்சார் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏ.ஆர்.எச்.மொஹிதீன் உறுதியளித்தார்.

இக்கலந்துரையாடலில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் இஸட்.ஏ.எம். அஸ்மீர், மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், சுகாதாரப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, கரையோரம் பேணல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, கடற்றொழில் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts