உள்நாடு | சமூக வாழ்வு | 2023-06-27 06:45:53

பட்டங்களைப் பெற்று பெயர்களை அலங்கரிப்பதை விட நல்ல புத்தகங்களை படித்து மனங்களை விரிவு படுத்துங்கள் இராணுவ மேஜர் உஷாம் சுபையிர் தெரிவிப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

ஆசிரியர்கள் பல பட்டங்களை பெற்று பெயர்களை அலங்கரிப்பதை விட நல்ல பல புத்தகங்களை படித்து மனங்களை விரிவுபடுத்த வேண்டும் என இலங்கை இராணுவத்தில் மேஜராக கடமையாற்றும் மருதமுனையை சேர்ந்த உசாம் சுபையிர் தெரிவித்தார்.

அரச சேவையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இரண்டாம் மொழி (சிங்களம்) 150 மணித்தியாலயங்களை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களின்  இறுதி நாள் நிகழ்வு மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் சிங்களப் பாட வளவாளர் ஏ.பி.ஆரிபீன் தலைமையில்(25) நடைபெற்றது. இதில் பிரதம அதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராணுவ மேஜர் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் உரையாற்றும் போது,


மொழி என்பது ஒரு தொடர்பாடல் கருவியாகும். இலங்கை நாட்டை பொறுத்தளவில் பல்லின மக்களும் வாழ்கின்ற ஒரு நாடாகும். பல்லின மக்களுக்கும் சேவையாற்றும் தகுதியை ஒவ்வொரு அரச சேவையாளரும் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு இரண்டாம் மொழி தேர்ச்சி என்பது கட்டாயமாகும். பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் எமக்கிருந்த வளங்களை சரியாக பயன்படுத்த தவற விட்டதால் இப்போது கற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒருவருடைய ஆளுமையை, சிறந்த சேவையை தீர்மானிக்கும் சக்தியாக அவரது மொழி ஆற்றல் காணப்படுகிறது.

இங்கு அதிகமான ஆசிரியர்களை காணக்கூடியதாக இருக்கிறது. பாடசாலைகளை பொறுத்தளவில் மாணவர்கள் கற்க தொடங்குகிறார்கள் ஆனால் ஆசிரியர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஒரு விடயத்தை கற்று மீண்டும் அதை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதனால் நாம் ஆசிரியர்களை கற்றுக் கொடுப்பவர்கள் என அழைக்கின்றோம். ஆசிரியர்கள் சிறந்த தேடல் உள்ளவர்களாக, புதிய விடயங்களை தேடி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் பயன்படுத்துகின்ற மொழி உச்சரிப்பையே மாணவர்களும் கற்றுக் கொள்ளுகிறார்கள். அமைச்சுகள், திணைக்களங்களில் இருந்து வருகின்ற சுற்று நிருபங்கள், கடிதங்கள், அறிக்கைகளை வாசித்து சரியான அர்த்தங்களை புரிந்து கொள்பவர்களாக ஆசிரியர்கள் மாற வேண்டும்.

அதேபோன்று மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வி கட்டாயமானதாகும். சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த பட்டம் - பதவிகளை பெற்றாலும் அவரிடத்தில் ஒழுக்கம் இல்லையேல் அவர் பெற்ற கல்விக்கும் பட்டங்களும் பயனற்றதாக மாறி விடுகிறது. இங்கு சிங்கள மொழியை கற்றுக் கொண்ட பலர் திறமையாக தமது மொழி வளத்தினை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இ - பெஸ்ட் கேம்பஸ் கல்வி நிலையத்தின் பணிப்பாளர் பி.எம்.ஜவ்பர், வளவாளர்களான எம்.புவாத், திருமதி.எம்.ஜாஹிதா ஜலால்தீன், எம்.ஐ.எம். பாரிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts