பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-06-16 05:51:41

கல்முனை மாநகர சபையில் கோலாகலமாக இடம்பெற்ற விருது விழா!

(ஏ.எம்.அஸ்லம், யூ.கே.காலிதீன்)

கல்முனை மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது விழா புதன்கிழமை (14) மாலை, கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இதன்போது மாநகர சபையின் 14 துறைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அதிசிறந்த ஊழியர்கள் 14 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ மேற்பார்வையாளரான எம்.எம். றிஸ்வான், கல்முனை மாநகர சபையின் கடந்த ஆண்டுக்கான அதிசிறந்த ஊழியராக (The Best Employee of the year) தெரிவு செய்யப்பட்டு, விஷேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் கல்முனை மாநகர சபையில் நிர்வாக உத்தியோகத்தர்களாக கடமையாற்றி, ஓய்வு பெற்றுள்ள எம்.ஏ.ரஹீம், ஆனந்தகெளரி கந்தசாமி உள்ளிட்ட 06 உத்தியோகத்தர்களினதும் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள 08 உத்தியோகத்தர்களினதும் சேவைகளைப் பாராட்டி, நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

மேலும், மாநகர சபையின் முதுகெலும்பாகத் திகழ்கின்ற திண்மக்கழிவகற்றல் சேவையில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருகின்ற 05 மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட 98 ஊழியர்கள் இதன்போது பரிசுப் பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவின் விஷேட அம்சமாக, கல்முனை மாநகர சபையை பொறுபேற்று குறுகிய காலத்தினுள் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு, மாநகர சபையை வினைத்திறன் மிக்க நிறுவனமாக மாற்றியமைத்தமைக்காக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள், 'ஆளுமைக்கான அடையாளம்' என்று மகுடம் சூட்டப்பட்டு, ஊழியர் சமூகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

இவ்விழாவில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களினால் அரங்கேற்றப்பட்ட பாடல்கள், நடனங்கள், கவிதைகள் உள்ளிட்ட கலை, கலாசார நிகழ்ச்சிகள் விழாவை களைகட்டச் செய்திருந்தன.

தேசிய கீதத்துடன் ஆரம்பமான இவ்விருது விழாவில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் வரவேற்புரையையும் பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ.வட்டப்பொல ஆகியோர் வாழ்த்துரைகளையும் விழாக் குழுச் செயலாளரான வருமான பரிசோதார் சமீம் அப்துல் ஜப்பார் நன்றியுரையையும் நிகழ்த்தினர்.

விழா நிகழ்வுகளை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் முஹம்மட் ஜாபிர் தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவில் மாநகர சபையின் கணக்காளர் கே.எம்.றியாஸ், ஆயுர்வேத வைத்திய அதிகாரி நந்தினி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், நிதி உதவியாளர் சசிகலா, உள்ளுராட்சி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.நெளசாட் உட்பட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வருமான பரிசோதகர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனைத்துப் பிரிவுகளினதும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கல்முனை மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான இவ்விருது விழா 

இராப்போசனத்துடன் இனிதே நிறைவடைந்தது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts