பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-03-29 05:37:35

சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கை வலுப்பெறுவதற்கு பெரும் பங்காற்றியவர் காஸிம் மௌலவி; சாய்ந்தமருது ஷூரா சபை தெரிவிப்பு

(சாய்ந்தமருது செய்தியாளர்)

05 தசாப்தங்களுக்கு மேலாக சாய்ந்தமருது பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்து வந்த சன்மார்க்க அறிஞர் அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் ஹஸ்ரத் அவர்கள் சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றியிருக்கிறார் என்று சாய்ந்தமருது ஷூரா சபை தெரிவித்துள்ளது.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் பிரதித் தலைவரும் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் முன்னாள் தலைவருமான யூ.எல்.எம்.காஸிம் மௌலவியின் மறைவு குறித்து ஷூரா சபை சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.அப்துல் ஜப்பார், செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் ஆகியோர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

ஒரு சன்மார்க்க அறிஞர் என்ற ரீதியில் தனது கடமைகளை மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற்றிய திருப்தியுடனேயே அன்னார் இறையடி சேர்ந்திருக்கிறார். எந்தவொரு பணியைச் செய்கின்றபோதிலும் எவ்வித குறையும் தவறும் நடந்து விடக்கூடாது என்பதில் திடமாக இருந்து மிகவும் நேர்த்தியாக செய்து முடிக்கும் ஆற்றலை அவர் கொண்டிருந்தார்.

பாடசாலையில் ஓர் ஆசிரியராக, பிரதி அதிபராக, பள்ளிவாசல் இமாமாக, ஊரை நிர்வகிக்கின்ற பெரிய பள்ளிவாசலின் பிரதித் தலைவராக, பதில் தலைவராக, ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளராக, தலைவராக, அரபுக் கல்லூரியின் அதிபராக, நிர்வாகத் தலைவராக, பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் தலைவராக, இணக்க சபை அங்கத்தவராக என்று பல பொறுப்புகளை சுமந்திருந்த ஹஸ்ரத் காஸிம் மௌலவி அவர்கள், அவற்றை அமானிதமாகக் கருதி, மிகவும் பக்குவத்துடன் மிகுந்த இறையச்சத்துடன் தனக்குரிய கடமைகளை நிறைவேற்றி வந்தமை அவரிடம் காணப்பட்ட சிறப்பம்சமாகும்.

1985 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் யுத்தம், இனக்கலவரங்கள் தலைதூக்கியிருந்த சந்தர்ப்பங்களில் கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு போன்ற பிரதேசங்களினதும் மக்களினதும் பாதுகாப்புக்காக உயிரைத் துச்சமாக மதித்து, இனங்களிடையே நட்புறவை ஏற்படுத்துவதிலும் சமாதான செயற்பாடுகளிலும் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தமை என்றும் நினைவுகூரத்தக்க விடயமாகும்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் ஊடாக சாய்ந்தமருது பிரதேசத்தில் பாடசாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கும் அவர் ஆணிவேராக இருந்து செய்யப்பட்டார்.  

2006ஆம் ஆண்டு முதல் சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் முன்னெடுத்திருந்த போராட்டங்களுக்கு பள்ளிவாசல் நிர்வாகமோ ஊர்ப் பெரியார்களோ ஆதரவளிக்க முன்வராத சூழ்நிலையில் ஹஸ்ரத் காஸிம் மௌலவி அவர்கள், தைரியமாக முன்வந்து, பக்கபலமாக செயற்பட்டதை மறக்க முடியாது.

இப்போராட்டத்தை பள்ளிவாசல் நிர்வாகமே முன்னின்று முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டபோது அவர் நிர்வாகத்தினுள் நியாயங்களை எடுத்துச் சொல்லி, அழுத்தம் கொடுத்ததன் பயனகாவே இப்போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்க 2015ஆம் ஆண்டு பள்ளிவாசல் நிர்வாகம் முன்வந்ததும் அது வரலாற்றுத் திருப்பமாக அமைவதற்கும் அவர் காரணமாக இருந்தார் என்பதை இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூருகின்றோம்.

இவ்வாறு சாய்ந்தமருது பிரதேசத்தின் முதுசமாகத் திகழ்ந்த ஹஸ்ரத் காஸிம் மௌலவியின் திடீர் மறைவு இப்பிரதேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்திருக்கிறது- என்று ஷூரா சபை தெரிவித்துள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts