பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-03-18 06:54:59

தொடர்ந்தும் தலைமுறை தலைமுறையாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இலங்கையை வைத்திருக்க முடியாது - அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ்.

சமூர்த்தி பயனாளிகள் தொடர்ந்தும் சமூர்த்தி பெறுபவர்களாக இருக்காமல் தொழில் முயற்சியாளர்களாக மாறவேண்டும். எங்களின் பயனாளிகள் நாங்கள் வழங்கியவற்றை கொண்டு முன்னேறுகின்ற போது எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். எல்லா விடயங்களுக்கும் அரசாங்கம் வழங்கும் இலவசத்தை நோக்கி காத்திராமல் நாங்கள் சுயமாக முன்னேற வேண்டும். எமது நாட்டு மக்களை பராமரிக்க இலவச மருத்துவம், இலவச கல்வி, சமூர்த்தி போன்ற பல்வேறு விடயங்களை அரசாங்கம் வழங்கி வருகிறது. இப்படியான நாட்டுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம். தொடர்ந்தும் தலைமுறை தலைமுறையாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இலங்கையை வைத்திருக்க முடியாது. இதனை மாற்றியமைக்க நாங்கள் எங்களிலிருந்து மாற்றத்தை உருவாக்கி சொந்தக்காலில் நிற்கும் வகையில் மாற வேண்டும் என அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் தெரிவித்தார். 

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு சாய்ந்தமருது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் விடய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப். றிகாஸா ஷர்பீனின் முயற்சியினால் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு மலேசியா மற்றும் உள்நாட்டு தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில் (14) செவ்வாய்க் கிழமை மாலை சமுர்த்தி வங்கிச் சங்க கூட்ட மண்டபத்தில் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.யூ.ஜூனைதா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில், 

நாட்டில் பொருளாதார நெருக்கடி இருக்கிறது. அரசாங்கத்தினால் எல்லா விடயங்களையும் சமாளிக்க முடியாது. எரிபொருள், மருந்து கொள்வனவு போன்றவற்றுக்கு அரசாங்கம் கோடிக்கணக்கில் செலவழிக்கிறது. இதனிடையே தான் வருமானம் குறைந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. நாட்டில் கொரோனா அலை வீசிய போது சமூர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் தமது உயிரையும் மதியாமல் களத்தில் நின்று பணியாற்றி பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்தார்கள். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடுமையாக உழைத்தார்கள். இதனால் நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் திறமையான மூன்று உத்தியோகத்தர்களை கொரோனாவில் இழந்தோம். சமூர்த்தியினால் மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதன் ஒரு கட்டமாகவே தனவந்தர்களின் உதவியுடனான இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். வேலைத்திட்டங்களை சிறப்பாக முன்னெடுப்பதில் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது முதன்மையான செயலகமாக திகழ்கிறது என்றார். 

இந்நிகழ்வில் விசேட அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷீக், கௌரவ அதிதிகளாக சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.றிபாயா, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ.மஜீத், கருத்திட்ட உதவியாளர் எம்.எம்.எம்.முபாறக், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.சர்பீன், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர், பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன், செயலாளர் எம்.முபீதா, முன்னாள் தலைவர் ஏ.அலாவுதீன், கணனி உத்தியோகத்தர் எஸ்.சாபித் அக்மல்  உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பயனாளிகளுக்கு அதிதிகளினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் செயலாளர் எம்.முபீதாவின் உதவியுடன் சாய்ந்தமருது - 05 ஆம் பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts