பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-03-15 18:16:39

கல்வியை சீரழிக்கும் அதிபரை இடம்மாற்றி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாடசாலை அபிவிருத்தி குழு முன்னாள் உறுப்பினர்கள் கோரிக்கை

(ஹுதா உமர்)

சம்மாந்துறை கல்வி வலயத்தின் கீழுள்ள கமு / சது / ஜமாலியா வித்தியாலயத்தின் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கட்டிட நிர்மாண வேலையில் இடம்பெற்றுள்ள ஊழல் குறித்தும், பாடசாலை அதிபர் எம்.எம். மஹிசா பானுவின் இயல்புகள், அதிகார துஸ்பிரயோகங்கள் குறித்தும் இந்த ஊழல்கள் இடம்பெற்ற ஒன்றரை ஆண்டுகளில் மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு 04 தடவைகளுக்கு, மாகாண கல்விப்பணிப்பாளர்களாக பதவி வகித்ததவர்களுக்கு 07 தடவைகளுக்கு, வலயக்கல்வி பணிப்பாளர்களாக பதவி வகித்த மூவருக்கும் மொத்தமாக 26 தடவைகளும் முறைப்பாடு செய்து எவ்வித பயனும் கிட்டவில்லை என அப்பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் முன்னாள் செயலாளர் எம். ஐ. எம். றிஸ்விகான் தலைமையிலான பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர் தெரிவித்தனர்.

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் சம்மாந்துறையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்கள் சந்திபின் போது தொடர்ந்தும் தெரிவித்தவை வருமாறு

சம்மாந்துறை கல்வி வலயத்தின் கீழுள்ள கமு / சது / ஜமாலியா வித்தியாலயத்தின் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கட்டிட நிர்மாண வேலையில் அதிபரால் ஊழல் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பாடசாலையின் அபிவிருத்தி குழுவால் செய்யப்பட வேண்டிய வேலையை இப்பாடசாலையின் அதிபர் வேறு ஒரு பாடசாலையின் அதிபருக்கு கொந்துராத்து கொடுத்து உள்ளார். அத்துடன் நில்லாமல் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவே வேலையை செய்ததாக பொய்யான மோசடியான அறிக்கைகளை தயார் செய்தும் உள்ளார்.

இவை தொடர்பாக நாம் கல்வித்திணைக்கள அதிகாரிகள் பலருக்கும் முறைப்பாடுகளை செய்தும் அவர்கள் எந்த நீதியான நடவடிக்கைகளையும் எடுக்காமல் அதிபரை காப்பாற்ற முயற்சிப்பதுடன் உடந்தையாகவும் நடக்கின்றார்கள். அதிபர், வலய கல்வி பணிப்பாளர் ஆகியோர் தொடர்பாக நாம் மாகாண கல்வி பணிப்பாளருக்கும், கல்வியமைச்சின் செயலாளருக்கும் முறையிட்டு  நீதிக்காக காத்திருந்தோம். அந்த நீதி இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அதிபரும் இடமாற்றம் பெற்றுச்செல்ல விரும்புவதாக இது தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கைகளில் தெரிவித்திருந்தும் அவர் இதுவரை இடமாற்றம் பெற்றுச் செல்லவில்லை.  நிதிமன்றுக்கும், ஊர் பிரமுகர்களுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளார். குற்ற செயலுக்கு உடந்தையாக செயற்படுவதும், குற்றம் புரிந்தோரை காப்பாற்ற முயல்வதும், குற்றம் புரிந்தோர் மீது நடவடிக்கை எடுக்க தவறுவதும் சட்டத்தின் பார்வையில் குற்றங்களே ஆகும். காலம் கடந்த நீதியும் அநீதியே ஆகும். இருப்பினும் ஏற்கனவே நாம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணை குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணை குழு, ஆளுனர் ஆகியோருக்கும் எழுத்துமூல முறைப்பாடுகளை மேற்கொண்டு பல கட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளோம். பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

அம்பாறை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச முக்கியஸ்தர்கள், பிரதேச அரசியல் பிரமுகர்களின் மேலான கவனத்துக்கும் இந்த விடயங்களை கொண்டு வந்து இருக்கின்றோம். ஆனால் அவர்களும் நீதியை பெற்றுத்தரவில்லை. அதே போல வெகுவிரைவில் ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர் போன்றோரை சந்தித்து முறையிடுகின்ற முன்னெடுப்புகளை ஆரம்பித்து உள்ளோம். எம்மை அடக்கி மௌனிக்க செய்வதற்கு ஊழல் சூத்திரதாரிகள் முயற்சிக்கின்றனர். எமது பாடசாலையில் பயில்கின்ற எமது பிள்ளைகளை பல வகைகளில் பழி வாங்குகின்றனர். எங்களின் பிள்ளைகளின் கல்வி வாழ்க்கை சீரழிகிறது. 

நாம் இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்ச போவதில்லை. நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடுவோம். அதிபர் உடனடியாக மாற்றப்பட வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தவறியோர் மீதும் உரிய சட்ட, நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சட்டம் அதன் கடமையை செய்யும் என்று இன்னமும் விசுவாசிக்கின்றோம். பாடசாலையில் இரண்டு தடவைகள் செயலாளராக தெரிவான என்னிடம் இதுவரை செயலாளருக்கான எவ்வித பொறுப்புக்களும் ஒப்படைக்கப்படவில்லை. போலியான ஒப்பங்கள், போலியான தீர்மானங்கள், போலியான தகவல்களை வைத்து பாடசாலை நிர்வாகம் இடம்பெற்று கொண்டிருக்கிறது. இவ்விடயங்கள் சகலவற்றுக்கும் கல்வி அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார். இது தொடர்பில் பெற்றோர்களின் ஒப்பங்கள் பெறப்பட்ட கோரிக்கைகள், முறைகேடு நடைபெற்றதாக சந்தேகிக்கும் ஆவணங்களை, அதிபரை இடமாற்றம் செய்ய கோரும் கோரிக்கைகளை மாகாண கல்விப்பணிப்பாளர், ஆளுநர் போன்றோருக்கு அனுப்பியுள்ளோம்.

சுமார் 40 வருட வரலாற்றைக்கொண்டு காணப்படும் இந்த பாடசாலையில் கல்வி மற்றும் பௌதீக அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்தி நாங்கள் பாடசாலையின் உயர்வுக்காக உழைத்துள்ளோம். இந்த பாடசாலையில் நிறைய மறைமுக அஜந்தாக்கள் நடக்கிறது. எங்களை பழிவாங்குவதாக எண்ணி எங்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் விளையாடுகிறார்கள். இது தொடர்பில் பல்வேறு தரப்பினருக்கும் பல முறைப்பாடுகளை செய்துள்ளோம். அவை வேலைக்கு ஆகுவது போன்று தெரியாத காரணத்தினால் ஊடகங்களின் உதவியை நாடியுள்ளோம். இந்த பிரச்சினைக்கு ஜனாதிபதி, பிரதமர், கல்வியமைச்சர், கல்வியமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால் தொடர்ந்தும் போராடுவோம் என்றனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts