பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-03-06 09:03:24

மக்கள் நலனில் அக்கரையற்ற பிரதேச சபையில் உறுப்பினராக இருந்ததனையிட்டு வெட்கமடைகின்றேன்- பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.அஜ்மல்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, பிரதேச சபையில் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டும், அவற்றில் பெரும்பாலானவை கிடப்பில் உள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.அஜ்மல் தெரிவித்துள்ளார்ர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, பிரதேச சபையில் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டும், அவற்றில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக பிரதேச சபையில் 18 உறுப்பினர்கள் இருந்தும் அவர்களது வட்டாரங்களில் பல்வேறு தேவைகள் உள்ள போதும் அவற்றினை நிறைவேற்றாமல் விட்டமை சபை உறுப்பினர்களுடைய பலவீனமாகும்.

நாட்டிலே ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் இன்று சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்கள் நலன் சார்ந்த பொதுவான விடயங்களை அபிவிருத்தி செய்வதற்கு பிரதேச சபையில் பலமுறை முயற்சிகளை மேற்கொண்டும் அவை பலனளிக்கவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் நகர திட்டமிடல் அமைச்சராக இருந்த போது, பிரதேச சபையின் ஆட்சியும் முஸ்லிம் காங்கிரஸின் வசமிருந்தது. அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான master plan ஒன்றினை தயாரிப்போம். முறையான திட்டமிடல்களை செய்து முடியுமானவற்றை செய்வோம் என சபையில் பல முறை பேசினேன்.

அதுமாத்திரமல்ல மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்ற அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தினை சகல வசதிகளையும் கொண்ட மைதானமாக அபிவிருத்தி செய்வோம் அதற்காகவும் திட்டமொன்றினை தயாரிப்போம் என வாதாடினேன். மாதிரி சிறுவர் பூங்கா ஒன்றினையும் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் செய்ய வேண்டும் என சபையில் பல முன்மொழிவுகளை செய்தேன்.

மக்கள் நலன் சார்ந்த அத்தனை விடயங்களும் தட்டிக்கழிக்கப்பட்டன. இந்த சபையினால் பிரதேசத்திற்கு செய்ய வேண்டிய நிறையப்பணிகள் இருந்தும் அவற்றினை செய்ய முடியாததனையிட்டு கவலையடைகின்றேன். பிரதேச சபையில் சுமார் 3கோடி ரூபா நிதியினை சேமித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மார்தட்டிப் பேசுகின்றனர். மூன்று கோடியினை கையில் வைத்துக்கொண்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றாது கலைந்து செல்லப் போகிறமே என்பதனையிட்டு மன வேதனையடைகின்றேன்.

எனக்கு மக்கள் வழங்கிய ஆணையினை மதித்து என்னால் முடியுமான பணிகளை எனது வட்டாரத்திதல் செய்துள்ளேன். எனது மக்களுடைய தேவைகளை சபையினால் செய்ய முடியாமல் போனாலும், தனிப்பட்ட ரீதியிலும், எனக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டும் பெரும் பணிகளை செய்ய முடிந்தது. அந்த மன திருப்தியோடு இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளேன்.

நடைபெறப்போகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கட்சி வேறுபாடுகளை களைந்து ஆளுமையுள்ளவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அட்டாளைச்சேனை பிரதேசத்தை அபிவிருத்தி செய்து அழகுபடுத்த முடியும் என்றார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts