பிராந்தியம் | அரசியல் | 2023-02-07 05:25:45

இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசியலமைப்பு திருத்தங்கள் எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பாக அமைந்து விடக்கூடாது; -கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப்

(எம்.எம்.அஸ்லம்)

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியலமைப்புத் திருத்தங்கள் எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பாக அமைந்து விடக்கூடாது என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் வலியுறுத்தியுள்ளார்.

கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த 75ஆவது தேசிய சுதந்திர தின விழா மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் கல்முனை வாசலில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதல்வர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் கௌரவ அதிதியாக பங்கேற்றிருந்ததுடன் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் சஹ்துல் நஜீம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால, மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.ஏ.எல்.எஸ். தமயந்தி, கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.றபீக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், கல்முனை பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹித் மற்றும் முப்படை அதிகாரிகளுடன் மாநகர சபை உறுப்பினர்கள், அரச, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் அத்திகளாக கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மாநகர முதல்வரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அத்துடன் நாட்டுக்காக உயிர் நீத்த படை வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அங்கு முதல்வர் ஏ.எம்.றகீப் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்;

எமது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்ற

மிகவும் கடினமான ஒரு காலகட்டத்தில் தாய்நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நாட்டில் சிறுபான்மையினர் மீதான பாரபட்சங்கள் தொடர்கின்ற நிலையில் சிறுபான்மைச்  சமூகத்தினர் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடத்தான் வேண்டுமா என்று சிலர் கேள்வி எழுப்புவதைக் காண முடிகிறது. ஆனால் சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பது ஆட்சியாளர்களுக்கானதோ அல்லது பெரும்பான்மை சமூகத்தினருக்கானதோ அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்,

நாட்டின் சுதந்திரத்திற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்தே போராடினார்கள். அதுவே நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தது. இலங்கைத் திருநாடானது சிறுபான்மையினராகிய எமக்கும் சொந்தமான தேசமாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது.

இதேவேளை, ஒவ்வொரு குடிமகனுக்கும் எப்போது அவரவர் சமய, கலாசாரங்களுடன் அனைத்து உரிமைகளையும் பெற்று சமத்துவமாக வாழக்கிடைக்கிறதோ அன்றுதான் நாட்டின் சுதந்திரம் அர்த்தமுள்ளதாக அமையும் என்பதை ஆட்சியாளர்களும் பெரும்பான்மை சமூகத்தினரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் நாம் அனைவரும் இந்த சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் இனங்களிடையே ஐக்கியமும் சமாதானமும் மலர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நாட்டில் வாழ்கின்ற அனைத்துப் பிரஜைகளும் நிம்மதி, சந்தோசத்துடன் வாழக்கூடிய சூழல் ஏற்பட வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். அதன் மூலம் சிறுபான்மைச் சமூகங்கள் வேண்டி நிற்கின்ற உரிமைகள், அபிலாஷைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்.

இன்றைய நாட்களில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பிலும் அதற்கான அரசியலமைப்பு திருத்தங்களை அமுல்படுத்துவது பற்றியும் அதிகம் பேசப்படுகிறது. நாட்டின் பொருளாதார மீட்சிக்காக சர்வதேசத்தின் உதவியை நாடி நிற்கின்ற எமது அரசாங்கம், அதன் அழுத்தங்களுக்கு உட்பட்டே சில விடயங்களை செய்வதற்கு முனைப்புக் காட்டுவதாக அறிய முடிகிறது. இந்த விடயத்தில் எந்தவொரு சமூகத்திற்கும் அநீதியிழைப்பதற்கு இடமளிக்கக் கூடாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

அனைவரும் இலங்கையர் என்ற கொடியின் கீழ் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். இந்த அடிப்படையில் எமது எதிர்கால சந்ததியினருக்கு வளமான நாடொன்றை கையளிப்பதற்கு தேசத்தின் விடுதலை தினமான இன்றைய தினத்தில் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம்.

இதேவேளை, இன ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான ஒரு முன்னுதாரண பூமியாக நமது கல்முனை மண் திகழ வேண்டும் என்பது எமது பேரவாவாகும். கல்முனை மாநகர ஆட்சி நிர்வாகமானது அத்தகைய ஒற்றுமைக்கு முன்மாதிரியான ஒரு தளமாக எம்மால் முன்கொண்டு செல்லப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், எமது கல்முனை மாநகர வாழ் மக்கள் அனைவரும் இன, மத, பிரதேச - பேதங்களுக்கப்பால், முரண்பாடுகளைக் களைந்து - புரிந்துணர்வுடன் கைகோர்த்துச் செயற்பட முன்வர வேண்டும் என அன்பாய் அழைப்பு விடுக்கின்றேன்- என்றார்.

தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பசுமை நகர நிகழ்ச்சித் திட்டமும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் நன்றியுரை நிகழ்த்தினார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts