பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-02-06 15:15:12

ஏ.எம்.அக்பரின் திடீர் மறைவு கல்முனை மாநகர சபைக்கு பேரிழப்பாகும்; முதல்வர் ஏ.எம்.றகீப் அனுதாபம்

(எம்.எம்.அஸ்லம்)

கல்முனை மாநகர சபையில் முன்னணி ஊழியராகத் திகழ்ந்த ஏ.எம்.அக்பர் அவர்களின் திடீர் மறைவானது எமது மாநகர சபைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் வேலைப் பிரிவு ஊழியர் ஏ.எம்.அக்பர் நேற்று இரவு காலமானார். இவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, மாநகர முதல்வர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

எமது மாநகர சபையின் மிக முக்கிய ஊழியரான அக்பர் அவர்களின் மரணச் செய்தியறிந்து அதிர்ச்சியும் துக்கமும் அடைந்துள்ளேன். நான் மாநகர முதல்வராக பதவியேற்றது முதல் ஏ.எம்.அக்பர் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் நன்கறிவேன். அவரது சேவை மனப்பாங்கு மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது.

வேலைகளின்போது எதிர்கொள்கின்ற எந்தவொரு பிரச்சினையாயினும் என்னையோ ஆணையாளரையோ பொறியியலாளரையோ நேரடியாக சந்தித்து, ஆலோசனை, அறிவுறுத்தல்களை பெற்றுக் கொள்கிற ஒரு ஊழியராக அவரைக் கண்டேன்
 
எமது மாநகர சபையை பொறுத்தளவில் சுகாதாரப் பிரிவும் வேலைப் பிரிவும் சபையின் முதுகெலும்பாக கருதப்படுகின்றன. மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு இப்பிரிவுகளில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் பணியாற்றக் கடமைப்பட்டிருக்கின்றனர்.

இவ்வூழியர்கள், அலுவலகப் பணியாளர்கள் போன்று கடமை நேரத்துடன் வேலைகளை நிறைவுறுத்துகின்ற மாமூல் செயற்பாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட கடமைகளை மாத்திரம் மேற்கொள்கின்ற ஊழியர்களல்ல. இவர்கள் அதையும் தாண்டி, எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டிய ஊழியர்களாவர். மாநகர சபை எல்லையினுள் ஏற்படுகின்ற அசாதாரண நிலைமை மற்றும் அனர்த்தங்களின் போது இவர்களது பங்களிப்பு என்பது அளப்பரியதாகும். இவர்களது பணி மிகவும் சவால்கள் நிறைந்தவையாகும்.
 
அந்த வகையில் வேலைப் பிரிவில் கடமையாற்றி வந்த ஏ.எம்.அக்பர் அவர்கள் கடமை  நேரத்திற்கும் அப்பால் ஒரு படை வீரர் போன்று எந்த நேரத்திலும் சேவையாற்றுவதற்கு தயார் நிலையில் சுறுசுறுப்புடன் இருந்து வந்தார்.

அதிகாரிகளினால் பணிக்கப்படுகின்ற எந்தவொரு கடினமான வேலையையும் எந்த நேரத்திலும் கூட்டுப்பொறுப்புடன் சிறப்பாக செய்து முடிக்கின்ற மனப்பாங்கையும் திறமையையும் அவர் கொண்டிருந்தார்.

மாநகர சபை முகம்கொடுத்த அசாதாரண நிலைமைகளின்போது மிகவும் கஷ்டமான தருணங்களில் எமக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி, மாநகர சபையின் நிர்வாகத்திற்கு என்றும் பக்கபலமாக இருந்து வந்திருக்கிறார்.

கடமையில் கண்ணியம், நேர்மை மிகுந்த நம்பிக்கை மிகுந்த ஊழியராகத் திகழ்ந்தார். அவரது சேவைகளை எம்மால் இலகுவில் மறந்து விட முடியாது. அவை என்றும் நினைவு கூறத்தக்கவையாகும்.
 
இவ்வாறு மிகவும் பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் தியாக மனப்பாங்குடனும் மிகச் சிறப்பாக கடமையாற்றி வந்த அக்பர் அவர்களின் திடீர் மறைவு எமது மாநகர சபைக்கும் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு மாநகர சபை சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்- என்று மாநகர முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனையை பிறப்பிடமாகவும் நிந்தவூரை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னாரது ஜனாஸா இன்று முற்பகல் நிந்தவூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts