![]() |
க.பொ.த உயர்தர பரீட்சைக் காலத்தில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குமாறு மின்சார சபைக்கு உத்தரவிடுமாறு கோரி பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, க.பொ.த உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரையில், மின் துண்டிப்பை தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் உயர் நீதிமன்றில் இன்று அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்தார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், மின்சார சபையின் தலைவர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், சட்டமா அதிபர் உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அத்துடன், இணக்கப்பாட்டை மீறி உயர்தர பரீட்சைக் காலத்தில் மின் துண்டிப்பை மேற்கொண்ட மின்சார சபைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.