![]() |
(ஏ.எல்.எம். ஷினாஸ்)
பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் நிலைய ஆலோசனை குழு என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம், இலவச மருத்துவ பரிசோதனை, மரம் நடுகை, சிரமதானம் ஆகிய நிகழ்வுகள் பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டு திட்டத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துசார திலங்க ஜெயலால் தலைமையில் (31) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்நாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்கினார். வீட்டு திட்டத்தில் வாழும் பொது மக்களையும் அதிகாரிகள் சந்தித்து தேவைகளை கேட்டறிந்து கொண்டனர்.
இதில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜெ. அதிசயராஜ், பெரியநீலாவணை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர். சசி யாப்பா, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்திய அதிகாரி டொக்டர். திருமதி சிபாயா தாஜுதீன், பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க உட்பட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் நிலைய அதிகாரிகள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின்போது தொற்றா நோய்கள் தொடர்பில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர் பி.எம் நஸ்றுதீன் பொது மக்களுக்கு விளக்கமளித்தார்.