![]() |
(ஏ.எல்.எம்.ஷினாஸ், எம்.என்.எம்.அப்றாஸ்)
அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற சர்சை சம்மந்தப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சுமுகமான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் இதுவிடயத்தில் அதிகாரிகள் பொறுப்புடனும்; விரைவாகவும் நடவடிக்கை எடுக்கும் அதே வேளை சமூக நல்லிணக்கத்தை பாதிக்காத வகையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டும். என அம்பாரை மாவட்ட நல்லிணக்க மன்றம் மற்றும் பிரதேச நல்லிணக்க மன்றங்கள் ஒன்றிணைந்து கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மாவட்ட நல்லிணக்க மன்றம் மற்றும் பிரதேச நல்லிணக்க மன்றங்களுடன் கடந்த (7) ஆம் திகதி எட்டப்பட்ட தீர்மானங்களுக்கமைய மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் இணைப்பாளர்களான எஸ்.எல்.ஏ. அஸீஸ், ஏ.சுதர்சன், ஐ.சீ. சேருவத்த ஆகியோர் ஒப்பமிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இச்சம்பவம் தொடர்பாக உண்மைத் தன்மையினை ஆராய்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்புடனும்; விரைவாகவும் நடவடிக்கை எடுக்கும் அதே வேளை சமூக நல்லிணக்கத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறித்த முரண்பாடு வளர்ந்து செல்லாது சுமூகமாக தீர்த்துக்கொள்ள கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக திருகோணமலையில் உள்ள சமய சமூகம்சார் நல்லிணக்க அமைப்புக்கள் கலந்துரையாடல்களை நடாத்தி அதனை தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும்.
இலத்திரனியல், அச்சு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் இவ் விடயம் தொடர்பாக சமூக நல்லிணக்கத்தினைப் பாதிக்காத வகையில் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்வதுடன் அதனை சுமூகமாக தீர்க்கும் வகையில் செயற்படவேண்டும்
ஒரு குறித்த பிரச்சினையை பூதாகரமாக்கி தேசிய ரீதியில் சமூகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்க விளையும் சக்திகள் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும்
அரசியல் சார்ந்தோர் தங்களது அறிக்கைகளை விடும்போது இன, சமூக நல்லிணக்கத்தை கருத்தில்கொண்டு பொறுப்புணர்வுடன் அறிக்கையிடுமாறும் செயற்படுமாறும் தயவாய் வேண்டுகிறோம்.
பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் மற்றும் அரச அமைப்புக்கள் குறித்த பிரச்சினை ஏற்படும்போது சாதூரியமாகவும் துரிதமாகவும் நல்லிணக்கத்திற்கு பங்கம் ஏற்படாத வகையிலும் தீர்த்துக்கொள்வதனூடாக எதிர்காலத்தில் நல்லிணக்கத்தை முன்னெடுக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இன்றைய மாணவர் சமூகம் நாளைய தலைவர்களாக உருவாக்கப்படவேண்டும் என்ற நோக்கை கருத்தில் கொண்டு மாணவர்களை நல்வழிப்படுத்தும் செயற்பாட்டில் கல்விச்சமூகம் கரிசனை கொள்ள வேண்டும் என வேண்டுகின்றோம்.
நம் நாட்டில் வாழும் அனைவரும் எதிர்காலத்தில் சகல இன சமூக கலாசார விடயங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் நல்லிணக்கமாகவும் சுகந்திரமாகவும் வாழ்வதற்கான சூழ்நிலைகளை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.