![]() |
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்யாலயம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02.2022) பாடசாலையின் அதிபர் எம்.எம். முஹம்மது நியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறை வானொலி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக பிரதேசத்தைச் சேர்ந்த நீண்ட காலமாக ஊடகத் துறையில் சேவையாற்றி வருகின்ற எம்.எல்.எம் ஜமால்தீன், பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.எல்.எம். ஷினாஸ், எஸ்.எம். தொஹ்தார், நளீம் எம் பதுறுத்தீன், ராசிக் நபாயிஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர். அதிதிகளுக்கு பாடசாலை சமூகத்தவர்களால் மாலை அணிவித்து பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் புடைசூழ பெரியநீலாவணை வீ.சி வீதி பிரதான சந்தியிலிருந்து சாரணர் மரியாதையோடு பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.
பிரதேசத்திலும் -பிரதேசத்துக்கு வெளியிலும் தேசிய ரீதியாக பல்வேறு தருணங்களிலும் அர்ப்பணிப்போடு ஊடகத்துறையில் கடமையாற்றி நாட்டின் அபிவிருத்திக்கு உன்னத சேவையாற்றி வருகின்ற ஊடகவியலாளர்களை 74வது சுதந்திர தின நிகழ்வில் கெளரவம் வழங்கப்பட வேண்டும். அதனை இன்று எமது பாடசாலை சமூகம் நன்றி உணர்வுடன் மேற்கொள்கின்றது என இங்கு உரையாற்றிய பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டார். இலங்கை திருநாட்டின் 74 வது சுதந்திர தின நிகழ்வு குறித்த விசேட சொற்பொழிவை பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதிப் பணிப்பாளர் நிகழ்த்தினார்.
நிகழ்வின்போது, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட நாட்காட்டி பாடசாலை அதிபருக்கு வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.சி. நஸார், மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல் பேஸ் இமாம் அஷ்ஷெய்க், ஏ.ஆர்.கியாஸ் மௌலவி உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்வுகளை பாடசாலையின் ஆசிரியர் கவிஞர் விஜிலி மூசா தொகுத்து வழங்கினார்.