உள்நாடு | கல்வி | 2022-02-03 18:29:17

தமிழ்-முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கல்வியலாளர்களும் வெளிப்படையாக உண்மையை பேச வேண்டும் - இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

"திருகோணமலை சண்முகா ஆசிரியைக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து தமிழ்-முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கல்வியலாளர்களும் வெளிப்படையாக உண்மையை பேச வேண்டும் - இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்"

(ஏ.எல்.எம்.ஷினாஸ், நூறுல் ஹூதா உமர், றாசிக் நபாயிஸ், எஸ்.அஸ்ரப்கான்)

பாதிக்கப்பட்டுள்ள திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை பாத்திமா பஹ்மிதா முகத்தை மூடிக்கொண்டு பாடசாலைக்கு வந்தார் என்பது அப்பட்டமான பொய்யாகும்; நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்; தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கல்வியலாளர்களும் வெளிப்படையாக உண்மையை பேச வேண்டும் - இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

தற்போது பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை பாத்திமா பஹ்மிதா குறித்த பாடசாலைக்கு முகத்தை மறைத்துக் கொண்டு வந்தார் என்று ஊடகங்களில் பேசுவது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்.  முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை காட்டுகிறோம் என பேசும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் போன்றவர்கள் இந்த விடயத்தில் வெளிப்படையாக நீதியை பேச வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்காமல் தமது சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து  வெளிப்படையாக பேச வேண்டும் நீதியைப் பெற்றுத் தருவதற்கு சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா தெரிவித்தார்.

சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (03.02.2022) மாலை கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் அம்பாரை மாவட்ட செயலாளர் ஆசிரியர் எஸ்.அஸ்ரப்கான்  உட்பட நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர்,

நீதிமன்ற சட்டத்திற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கும் இங்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு குறித்த ஆசிரியரால் மேன்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் நிமித்தமாக மேல் நீதிமன்ற வழங்கிய 5 பக்க அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய 19 பக்க பரிந்துரைகளுக்கு அமைய கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் உடைய கண்காணிப்பின் கீழ் குறித்த ஆசிரியை கடமையை பொறுப்பேற்க அங்கு சென்றபோது ஆசிரியரை கடமையேற்க விடாது அவர் மீது தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து தற்போது உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவது முழு முஸ்லிம் சமூகத்திற்கும் கவலையைத் தருகின்றது. குறித்த ஆசிரியை முகத்தை மூடிக்கொண்டு பாடசாலைக்குச் சென்றதாக தற்போது பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால்  எமக்கு அவருடைய கணவர் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த பாத்திமா பஹ்மிதா என்ற ஆசிரியை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பாடசாலையிலும் சரி பாடசாலைக்கு வெளியிலும் சரி முகத்தை மூடி செல்வதில்லை என்று தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும் என்றும் எம்மிடம் தெரிவித்தார் இதற்கு சான்றாக குறித்த பாடசாலையை அண்மித்த பகுதிகளில் இருக்கின்ற சி.சி.டிவி கமரா காணொளிகள் இருக்கின்றன.

ஆசிரியர்களோ மாணவர்களோ பாடசாலை நிருவாகத்தினரோ உணர்ச்சிவசப்பட்டு விடக் கூடாது என்பதற்காக பொறுமையாக செயற்பட வேண்டும் என்று நாம் தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கையின் கல்வி சட்டவாக்கம், மனித உரிமைகள் சட்டவாக்கம் என்பன ஒரு ஆசிரியர் அவருடைய கலாசார ஆடைகளை அணிந்து கொண்டு பாடசாலைக்குச் செல்லலாம் என்று கூறுகின்ற போது குறித்த பாடசாலையில் இவ்வாறான ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ளமை முழு முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் இன்று கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

இந்த சம்பவம் நாளை ஒரு சிங்கள மொழிமூல பாடசாலையிலோ அல்லது முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற ஒரு பாடசாலையில் கற்பிக்கின்ற தமிழ் ஆசிரியருக்கோ நடைபெறாமல் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் நீதியான நேர்மையான நியாயமான தீர்ப்பை வெளியிட வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர் என்று பேசிக் கொள்கின்ற சாணாக்கியன் போன்ற அரசியல்வாதிகள் திருகோணமலை சண்முகா கல்லூரியில் ஏற்பட்டிருக்கின்ற இந்த சம்பவம் குறித்து நீதியாக பேச வேண்டும். பல தமிழில் தலைவர்கள் கல்வியலாளர்கள் எம்மோடு தொலைபேசியில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளியே வந்து வெளிப்படையாக தங்களுடைய கருத்தை வெளியிட வேண்டும். முஸ்லிம் -தமிழ் என்று இனவாத குறியீடுகளுக்கு அப்பால் ஒரு ஆசிரியைக்கு இழைக்கப்பட்ட  அநீதியாகவே நாம் இதனை பார்க்கின்றோம்.

இந்த நாட்டிலே ஒரே நாடு ஒரே சட்டம் என்கிற திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற பொழுது , முஸ்லிம்- தமிழ் என்ற இன வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு ஆசிரியைக்கு இழைக்கப்பட்டுள்ள  அநீதி என்ற அடிப்படையில் நாம் எல்லோரும் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்த நாட்டைப் பொறுத்தளவில் மிக முக்கியமான ஒரு சட்டத்தை வெளியிடுகின்ற அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு உரியதாகும். மேல் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டு இருக்கின்ற அந்த சட்டவாக்க நிபந்தனைகள் மறுக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டிருந்த நிபந்தனைகளும் இங்கு மறுக்கப்பட்டிருக்கிறது. கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட நிபந்தனைகளும் மறுக்கப்பட்டிருகின்றன. கல்வி சமூகத்தைப் பொறுத்த அளவில் மிக முக்கியமான மூன்று உரிமைகள் மறுக்கப்பட்டு ஒரு ஆசிரியர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த அளவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் பாடசாலைகளில் தலைமை ஆசிரியர்களாக தமிழ் ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். இந்தப் பிரதேசத்தினுடைய கல்வி அபிவிருத்தி என்பது தமிழ்- முஸ்லிம் இரண்டு சமூகங்களும் இணைந்த கல்வி அபிவிருத்தியாக முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.

நாம் ஒரு கேள்வியை மாத்திரம் கேட்க விரும்புகின்றோம் இன்று அபாயா அணிந்து சென்று எங்களுடைய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சகோதரி அந்த பாடசாலைக்குச் செல்ல முடியாது என மறுத்து அவருடைய கலாசார ஆடையை மறுக்கின்ற ஒரு விடயத்தை நீங்கள் செய்தால், நாங்கள் கேட்கின்றோம் முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்ற பாடசாலைகளில் கற்பிக்கின்ற உங்களுடைய இனத்தைச் சேர்ந்த யாராவது ஒருவரை எங்களுடைய ஆடையிலே வரவேண்டும் என்று சொன்னால் உங்களுடைய நிலைமை என்னவாகும்? அப்படியான விடயங்களை பேசுவதற்கு நாங்கள் இங்கு வரவில்லை. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தளவில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்த அடிப்படையில் கல்விப்புலத்தில் பயணிக்க வேண்டும். சகல உயர் அதிகாரங்களிலும் இரண்டு சமூகத்தைச் சார்ந்தவர்களும் இருக்கிறார்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வது என்னவென்றால் குறித்த அந்த ஆசிரியரின் உரிமை, அடிப்படை உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அரசியல் யாப்பில் இருக்கின்ற ஒருவருடைய கலாசார ஆடையை அணிவதற்கு முடியாமல் போயிருக்கிறது. ஆகவே இந்த விடயத்தில் தமிழ் -முஸ்லிம் அரசியல்வாதிகள், கல்வியலாளர்கள், வெளிப்படையாக வெளியே வந்து தங்கள் சமூகத்தின் முன்னால் நீதியை பேச வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டும் .எதிர்காலத்தில் குறித்து ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயமான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தமிழ் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts