உள்நாடு | சமூக வாழ்வு | 2022-02-02 13:12:35

தேரரின் தலைமையில் கல்முனையில் போராட்டம் : பிரதேச செயலக வளாக வாயிற்கதவை மூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் - அதிகாரிகளின் சமரசம் வீணானது ! 

நூருல் ஹுதா உமர் 

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத்திட்டத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரினால் அப்பிரதேச மக்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தலைமையிலான பொதுமக்கள் இன்று (02) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (02) காலை கல்முனை சுபத்திராம விகாரைக்கு  முன்னால் ஒன்று கூடிய மக்கள் அங்கிருந்து பேரணியாக கல்முனை பிரதேச செயலகத்தை வந்தடைந்தனர். இதனையடுத்து கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சுகாதாரப்பிரிவு, நகர அபிவிருத்தி அதிகாரசபை அமைந்துள்ள கட்டிடத்தொகுதியின் பிரதான கதவை மூடி, வழிமறித்து தமது சுகாதார பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வை வழங்க வேண்டும் என கோரி குறித்த இடத்தில் அமர்ந்திருந்தனர். "கழிவு நீரை வைத்து அரசியல் செய்யாதீர்", "மக்களின் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்", "முறையான கழிவகற்றல் செய்யப்படவேண்டும்", "மாநகர சபை மௌனம் காப்பது ஏன்?" போன்ற சுலோகங்களை ஏந்தி பொதுமக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி  சுமுகமான தீர்வை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனினும் பொதுமக்கள் அங்கிருந்து செல்லவில்லை. மாநகரசபை முதல்வர், சுகாதார தரப்பினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்து பொது மக்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்சாத் காரியப்பர், பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் .ரம்சின் பக்கீர், உட்பட கல்முனை தெற்கு மற்றும் வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிகள்  நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சுமுகமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த கழிவுநீரை உடனடியாக கல்முனை மாநகர சபையின் உதவியைக் கொண்டு அப்புறப்படுத்துவது எனவும்  நிரந்தரத் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாடி தீர்வு பெற்றுத் தருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உறுதியளித்தனர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த வாக்குறுதியை ஏற்றுக்கொள்ளவில்லை தமிழர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பிரதேச செயலக வளாகத்துக்குள் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டதுடன்  குறித்த வீதியூடாக போக்குவரத்தும் தடைப்பட்டு காணப்பட்டன அதனை சீரமைக்கும் பணியை கல்முனை பொலிஸார் வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தத்துடன் அங்கு தற்காலிய கொட்டிலமைத்து தொடர்ந்தும் தீர்வு கிட்டும்வரை தரித்திருக்க முயறசித்தவர்களை தடுத்து நிறுத்திய கல்முனை பொலிஸார் தொடர்ந்தும் சுமூகமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன், கல்முனை ஸ்ரீ சுபத்திரா விகாராதிபதி ரன்முதுகல தேரர் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் இந்த பிரச்சினை தொடர்பில் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட்டனர். இதன்மூலம் இனக்கலவரம் மற்றும் வீணான பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதாக பலரும் ஊடகங்களுக்கு சுட்டிக்காட்டினர். 

இவர்களிடம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்சாத் காரியப்பர் இவ்விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் என்னால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு போன்று நிரந்தரமாக ஒரு தீர்வு கிடைக்கும் வரை பொதுமக்களின் சுகாதார பிரச்சினைக்கு த்தால் முடியுமான சகல உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார். பிரதேச செயலாளரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தும் ஆர்ப்பாட்டகாரர்கள் தொடர்ந்தும் போராட்டை முன்னெடுத்து வருகின்றனர்.