உள்நாடு | அரசியல் | 2022-02-02 06:58:54

கல்முனை மாநகர சபை மயில் சார்பிலான உறுப்பினர் ஷிபான் பதவி துறந்தார் : இராஜினாமாவுக்கான காரணம் தொடர்பில் ஊடக மாநாட்டில் விளக்கம் !

(நூருல் ஹுதா உமர், பாறூக் ஷிஹான், ஏ.எல்.எம்.ஷினாஸ், எம்.என்.எம். அப்ராஸ், றாஸிக் நபாயிஸ்)

தலைவர் சிறைக்கு சென்றிருந்த வேளையில் அவரின் விடுதலைக்காக வேண்டி கடுமையான முறையில் போராடியிருக்கிறேன். தலைவர் விடுதலையான பின்னர்  நன்றி கூறும் நிகழ்வுக்காக மருதமுனைக்கு வருகைதந்த போது அந்த நிகழ்வை ஒழுங்கமைத்திருந்த மத்திய குழுவினர் ஊரில் இருந்த ஒரே ஒரு மாநகர சபை உறுப்பினரான என்னை அவர்களின் காழ்ப்புணர்ச்சி காரணமாக அழைக்காமல் விட்டார்கள். தலைவரை கொழும்பில் வைத்து நேரடியாக சந்தித்து பல்வேறு விடயங்களை கலந்துரையாடினேன். தலைவரின் ஆலோசனைக்கிணங்க என்னுடைய மாநகர சபை உறுப்பினர் பதவியை இன்று முதல் இராஜினாமா செய்வதாக அறிவிக்கிறேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான் அறிவித்தார்.

திங்கட்கிழமை (31) இரவு அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், எங்களின் கட்சியின் மருதமுனை மத்திய குழுவினரின் நடவடிக்கையில் பல்வேறு அதிருப்திகள் இருக்கிறது. அவர்களின் சுயநல போக்குகளுக்காக எங்களின் பிரதேசத்தில் கட்சியை சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கைகளில் உள்ள அதிருப்தியினால் கட்சியை விட்டு வெளியேறப்போவதாகவும் தேசிய காங்கிரஸுடன் நான் இணையவுள்ளதாகவும் பல்வேறு கட்டுக்கதைகள் உலாவிக் கொண்டிருக்கிறது. இன்று கல்முனை மாநகரசபையின் அமர்வினை எனது இறுதி சபையாக்கி கலந்துகொண்டேன். எனது உறுப்புரிமையை ராஜினாமா செய்து அடுத்ததாக பதவியில் அமர்த்தப்பட்ட இருக்கின்ற ஒருவருக்கு வழங்கவுள்ளேன். மருதமுனையில் கட்சி கடைப்பிடித்துவரும் கொள்கைக்கு நானும் எனது பூரண பங்களிப்பினை வழங்கி விடைபெறுகின்றேன். என்னுடைய மாநகர சபை உறுப்புரிமையை இராஜினாமா செய்தாலும் கூட அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் தொடர்ந்தும் வலுவான முறையில் பயணிப்பேன்.

என்னைப் பொறுத்த அளவில் 5 ஆம் வட்டாரத்தில் ரோட்டு போட்டால் ஓட்டு போடுவோம் என போர்க்கொடி தூக்கிய  மக்களுக்கு, வெற்றி பெற்றால் தீர்வொன்று கிட்டுமென்று தேர்தலில் களம் கண்டு இருப்பினும் அந்த வட்டாரத்தில் தோல்வியை தழுவிக் கொண்டமையினால் அந்த மக்களுக்கு ரோட்டு போட்டுக் கொடுக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி இன்றுவரை எனக்கு இருந்து கொண்டே இருக்கின்றது .

மாநகர சபையை ஆளுகின்ற முஸ்லிம் காங்கிரஸ்  அந்த வீதியை போடப்பட்டு இருப்பினும் , அந்த வீதிக்கு ஒளி ஊட்டுகின்ற பணியினை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு முழுவதுமாக, சுமார் 90 வீதமான பகுதிக்கு ஒளியூட்டி கொடுத்து இருக்கின்றேன் என்ற திருப்தியோடு விடைபெறுகின்றேன். இதற்காக எனக்கு உதவியும் ஒத்துழைப்பும் செய்த கல்முனை மாநகர மேயருக்கு நான் என்றென்றும் நன்றியோடு இருக்க கடமைப்பட்டுள்ளேன். எனது உறுப்புரிமை பதவிக் காலத்தில் சுமார் 60  கோப்ரா ரக மின் குமிழ்களை பொருத்தி உள்ளேன். கணிசமான கோப்ராரக  மின் குமிழ்களை  மேயர் எனக்குத் தந்து உதவியுள்ளார். நான் எனது கொடுப்பனவை கொண்டு அறிமுகபடுத்திய மாதம் ஒரு வேலை திட்டத்தின் கீழ் மின் குமிழ்களை பெற்று கொடுத்துள்ளேன். கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எச்.எம். அப்துல் மனாப் அவர்களும் எனக்கு மின்குமிழ்கள் தந்து உதவி இருந்தார். மேலும் உறுப்புரிமையை  எனக்கு மாநகரசபையில் ஆறாவது  முறையாக வேனும்  ஏற்படுத்தித் தந்த கட்சியின் தலைவர், செயலாளர், தவிசாளருக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரையில் நான் எங்கள் கட்சிக்காக உழைத்துள்ளேன்.  என்மீது சுமத்தப்பட்ட மாநகரசபை உறுப்புரிமை எனும்  அமானிதத்தை என்னால் முடியுமான அளவு சரியாக செய்திருக்கின்றேன். எனது காலத்தில் எங்கள் வட்டாரத்தில் மின்குமிழ் பொருத்துவது ஆயினும் திருத்துவ தாயினும் சரியான முறையில் நடைபெறுவதற்கு உந்துதலாக இருந்து உள்ளேன்.  மற்றும் திண்மக்கழிவகற்றல் சரியான முறையில் செயற்படுத்துவதனை கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி அர்ஷாத் காரியப்பர், மேயர் போன்றோர்களுடன் பேசி உத்தரவாதப்படுத்தியிருந்தேன்.

மாநகர சபையின் சுகாதார குழுவில் அங்கம் வகித்து இந்த மாநகரத்திற்கு திண்மக்கழிவகற்றல் சம்பந்தப்பட்ட வேலைகளில் ஒத்துழைப்போடு கடமையாற்றி உள்ளேன்.  மற்றும் மாநகர மக்களின் நன்மைக்காக திண்மக் கழிவகற்றல் வரியை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க் கட்சியிலிருந்து  அழுத்தம் கொடுத்தவனாக நானும் இருந்துள்ளேன். மாத்திரமல்லாமல் மாநகரசபையில் மேயரின் நல்ல விடயங்களை ஆதரித்தும் சில நேரங்களில் எதிர்த்தும் வந்திருக்கின்றேன்.  மாநகர மக்களுக்காக  எந்த சமயத்திலும் உறுதியோடு உண்மைக்கு உண்மையாக செயற்பட்டு வருகின்றேன் என்பதனையும் இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

ஆனால் துரதிஷ்டவசமாக நான் பதவி ஏற்றுக்கொண்ட காலமாயினும் சரி, கல்முனை மாநகர சபையின் கடந்த 3 வருட  காலமாயினும் சரி எமது கட்சிக்கும் தலைமைக்கும் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளை கொண்ட காலமாகவே அமைந்திருந்தது.  2019 குண்டுவெடிப்பு மற்றும் கட்சித் தலைமை பழிவாங்கப்பட்டமை போன்ற இன்னோரன்ன காரணங்களால் கட்சியினால் எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளையும் கடந்த காலங்களில் செய்துகொள்ள முடியாத நிலை இருந்து வந்திருக்கின்றது. மேலும் எனக்காக எந்த சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்கிய மாநகர மேயர், பிரதி மேயர், உறுப்பினர்கள், மாநகர அதிகாரிகள், ஊழியர்கள் , அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.  மேலும்  என் மீது நம்பிக்கை வைத்து எனக்காக வாக்களித்த வட்டார மக்களுக்கு என்றென்றும் நன்றியும் விசுவாசமும்  இருப்பேன் என கூறிக் கொள்கின்றேன் என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் நெய்னா முஹம்மத், ஷிபானின் இடத்தை நிரப்பவுள்ளவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஓய்வு பெற்ற கிராம நிலதாரி  ஏ.எச்.ஏ. ழாஹிர் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts