உள்நாடு | அரசியல் | 2022-01-28 20:13:01

உள்ளூர் உற்பத்திகளை பெருக்க வேண்டிய தேவைப்பாடு தற்போது உணரப்படுகிறது : அக்கரைப்பற்று மேயர் ஸஹி

-நூருள் ஹுதா உமர்-

உள்ளூர் உற்பத்திகளை பெருக்க வேண்டிய தேவைப்பாடு தொடர்பில் எனது தந்தையான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாயுள்ளா 1995 களில் பெரும் தலைவரின் இணைப்புச் செயலாளராக செயற்பட்ட காலத்தில் இருந்து பிராந்திய பொதுமக்களுக்கு வலியுறுத்தி வந்திருக்கின்றார். நம் வசம் இருக்கும் இயற்கை உற்பத்திகளை வாழ்வாதாரத்திற்கு பயனுள்ளதாய் மாற்றியமைத்து பொருளாதார சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று தேசிய காங்கிரஸ் தலைவர் மக்களுக்கு தூரசிந்தனையுடன் சுட்டிக்காட்டிய போது அவ்விடயங்களை இங்கே ஒரு சிலர் கேலி செய்தனர். ஆனால், காலம் கடந்தும் அவ்வுண்மைகள் சமகாலத்தில் மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றன என்று அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அகமட் ஸகி தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் 2021ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தேவையுடைய மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் எண்ணக்கருவில் அக்கரைப்பற்று நகர் வட்டாரத்தினைச் சேர்ந்த தேவையுடைய  பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(27) கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அகமட் ஸகி அவர்களின் தலைமையில் ஹல்லாஜ் தகவல் வள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போதே மாநகர முதல்வர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

மாநகர முதல்வர் தொடர்ந்தும் அங்கு உரை நிகழ்த்துகையில்; நாடு பாரிய பொருளாதார இக்கட்டில் இருந்து கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே தேவையுடைய மக்களுக்கு நாம் வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றோம். இந்த உதவிகளை கொண்டு குறித்த பயனாளிகள் சுய வாழ்வாதார முன்னேற்றத்தில் கரிசனை செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் அரசாங்கம் மஞ்சள் இறக்குமதியை முற்றாக தடை செய்து அதனை உள்ளூரில் உற்பத்தி செய்யுமாறு ஊக்குவித்ததன் பேரில் தற்போது நாட்டில் மஞ்சள் உற்பத்தியில்  தன்னிறைவு ஏற்பட்டுள்ளதை உணரக்கூடியதாக இருக்கிறது. நாட்டின் ஜனாதிபதி உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். இருப்பினும், எமது விவசாயம் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து நெல்லினை  கிலோ 70 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதாக அறிவித்துள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பு வர்க்க பேதமின்றி அனைத்து குடும்பங்களிலும் பாரிய தாக்கங்களை செலுத்தியுள்ளது. எனவே, நாட்டின் பொருளாதார சூழலை கருத்திற் கொண்டு இங்கே தரப்பட்டுள்ள வாழ்வாதார உதவிகளை நீங்கள் அர்த்தமுள்ளதாய் மாற்ற வேண்டும். குடும்ப பெண்கள் இங்கே வழங்கப்பட்டுள்ள தையல் இயந்திரங்கள் ஊடாக ஆடை உற்பத்தியில் கரிசனை செலுத்த வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, மாநகர சபை கணக்காளர் எப்.எம். பர்ஹான், மாநகர சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.பீ. சலீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.