ஆரோக்கியம் | மருத்துவம் | 2022-01-16 19:40:35

கொரோனா தொற்றினால் கல்முனையில் இருவர் மரணம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று(16) கொரோனா தொற்று நோயின் காரணமாக இருவர் மரணமாகியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி.சுகுணன் சற்று முன்னர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தமையால் இறுக்கமான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டதுடன் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு Covid-19 கொரோனா தொற்று நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கடந்த 2021இறுதிக் காலப்பகுதியில் கல்முனைப் பிராந்தியம் இலங்கையில் மிகவும் பாதுகாப்பான பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்னிலையில் பொதுமக்களுக்கான தடுப்பூசி  பிராந்தியத்தில் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வந்ததுடன், பொதுமக்கள் சுகாதார சட்ட விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் சுகாதார தரப்பினரால்  வழங்கப்பட்டு வந்தன.

பொது நிகழ்வுகளில் அதிகமானவர்கள் கலந்து கொள்வதும், முகக்கவசம் அணியாமல் அலட்சியம் செய்யும் நிலை என்பன அவதானிக்கப்பட்டு வந்த நிலையில் கல்முனைப் பிராந்தியத்தில் தற்போது இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளன.


மரணித்தவரில் ஒருவர் 58 வயதுடைய பெண்மணி சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மல்வத்தை பிரதேசத்தை சேர்ந்தவர். அடுத்தவர் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பிரிவைச் சேர்ந்த மாதவன் வவீதியில் வசித்து வந்தவர் இவருக்கு 74 வயதாகும். இதில் மல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த பெண்மணி எதுவித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை. எனினும் கல்முனையை சேர்ந்தவர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர் இவர் கொவிட் நியூமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.


பொதுமக்கள் விழிப்பாக செயற்பட வேண்டும் அடுத்த மரணம் உங்கள் கதவுகளையும் தட்டும் எல்லோரும் ஒன்றிணைந்து Covid-19 கொரோனா  தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சுகாதார சட்ட விதிமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும் எனவும் சுகாதார தரப்பினரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts