உள்நாடு | அரசியல் | 2022-01-04 16:06:00

கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் 03 வீதிகளுக்கு புதிய பெயர்கள்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட 03 உள்ளூர் வீதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டுவதற்கு
மாநகர சபை தீர்மானித்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் 45ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற போது, இதற்கான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.

கல்முனை முதலாம் பிரிவிலுள்ள ஆஸ்பத்திரி 04ஆம் குறுக்கு வீதியின் பெயரை கிராம அபிவிருத்தி சங்க வீதி எனவும் அதே பிரிவிலுள்ள எல்லை வீதி 06ஆம் குறுக்கு வீதியின் பெயரை ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வீதி எனவும் மாற்றுவதற்கான பிரேரணைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான ஹென்றி மகேந்திரன் சமர்ப்பித்து, அதற்கான காரணங்களை எடுத்துக் கூறினார்.

இப்பிரேரணைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.குபேரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் ஆகியோர் வழிமொழிந்து ஆமோதித்தனர். இதையடுத்து சபையில் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், இப்பிரேரணைகள் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதாக முதலவர் அறிவித்தார்.

அதேவேளை, சாய்ந்தமருது முதலாம் பிரிவிலுள்ள பத்தாஹ் பள்ளிவாசல் அமைந்துள்ள பாதைக்கு பத்தாஹ் பள்ளி வீதி என பெயர் சூட்டப்பட்ட வேண்டும் என சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் என்.எம்.ரிஸ்மீர் முன்மொழிய, அதே சுயேட்சைக்குழு உறுப்பினரான எம்.எஸ்.ஏ.றபீக் வழிமொழிந்து ஆமோதித்தார். இதற்கு முதல்வர் அனுமதி வழங்கியதுடன் சபை அங்கீகாரமும் வழங்கப்பட்டது.

குறித்த மூன்று வீதிகளுக்கும் புதிய பெயர்களை சூட்டுவதற்காக நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானங்களின் பேரில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்காக மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு சபைச் செயலாளருக்கு முதலவர் பணிப்புரை விடுத்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts