உள்நாடு | சமூக வாழ்வு | 2021-12-31 00:13:37

கல்முனை கடற்கரைப் பள்ளி கொடியேற்று விழாவுக்கு மாநகர சபையில் செயலாற்றுக் குழு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அரச அங்கீகாரத்துடன் தேசிய கலாசார விழாவாக கொண்டாடப்படவுள்ள கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200ஆவது வருடாந்த கொடியேற்று விழாவுக்காக கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்களை கையாள்வதற்காக விசேட செயலாற்றுக் குழுவொன்று மாநகர முதலவரினால் நியமிக்கப்பட்டுள்ளது.

கல்முனை நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200 ஆவது கொடியேற்று விழா ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று கல்முனை மாநகர சபையில், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இக்குழுவினரை நியமனம் செய்தார்.

மாநகர சபையின் அதிகாரிகள் தரப்பில் ஆணையாளர் எம்.சி.அன்சார் தலைமையில் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர், சுகாதாரப் பிரிவு முகாமைத்துவ உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சபை சார்பில் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் தலைமையில் மாநகர சபை உறுப்பினர்காளான் எம்.எஸ்.எம்.நிசார், ரொஷான் அக்தர், ஏ.சி.ஏ.சத்தார், எம்.எம்.பைரூஸ், ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.உமர் அலி, எம்.எஸ்.எம்.ஹாரிஸ் ஆகியோருடன் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ.பாவா மற்றும்
12ஆம் வட்டார அமைப்பாளர் எம்.எஸ்.எம்.பளீல் ஆகியோரும் இக்குழுவுக்கு அங்கத்தவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இக்கொடியேற்று விழாவுக்காக மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து விடயங்களையும் கையாள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இச்செயலாற்றுக் குழுவினருக்கு மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் பிரிவு 14 (4) யின் கீழ் அனைத்து அதிகாரங்களும் தன்னால் வழங்கப்பட்டிருப்பதாக மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் இதன்போது அறிவிப்புச் செய்தார்.

இச்செயலாற்றுக் குழுவின் ஒருங்கிணைப்பில் குறித்தொதுக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் முறையாகவும் துரிதமாகவும் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச வர்த்தமானி பத்திரிகை மூலம் தேசிய கலாசார விழாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்முனை நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200 ஆவது வருடாந்த கொடியேற்று விழா எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ச்சியாக 12 நாட்கள் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts