பிராந்தியம் | பொருளாதாரம் | 2021-12-22 12:53:49

2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படும் "கிராமத்துடன் உரையாடல்" வேலைத்திட்டம் ஆரம்பம் !

(ஹுதா உமர்)

வரவுசெலவுத்திட்டம் 2022 இற்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தியின் பயன்கள் விரைவாக மக்களுக்கு சென்றடையும் வகையில் கிராம மட்ட பிராந்திய அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற "கிராமத்துடன் உரையாடல்" கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி கருத்திட்ட முன்மொழிவுகளை செயற்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் என்பற்றைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களினூடாக முழு வேலைத்திட்டத்தையும் முன்னுரிமை வேலைத்திட்டமாக செயற்படுத்துவதற்கான சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்கான ஆரம்பகட்ட கூட்டம் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபாவின் தலைமையில் செவ்வாய்க்கிழமை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

"கிராமத்துடன் உரையாடல்" கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்விற்கு அதிதியாக வனவிலங்கு பாதுகாப்பு, வனவளஜீவன அபிவிருத்தி மற்றும் யானை வேலிகள் அமைத்தல் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா,  டாக்டர் திலக் ராஜபக்க்ஷ ஆகியோர் கலந்து கொண்டதோடு இவ்வேலைத்திட்டம் தொடர்பிலான சிறப்புரை நிகழ்த்தினர். மேலும் வளவாளராக கலந்து கொண்ட அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ்  கலந்துகொண்டு இவ்வேலைத்திட்டம் பற்றிய விளக்க உரை நிகழ்த்தினார்.

பிரதேச செயலக மட்டத்தில் கிராமிய அபிவிருத்தி கருத்திட்ட முன்மொழிவுகளை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் பற்றிய விளக்கம் வளவாளராக கலந்து கொண்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம். அஸ்லம் இனால் வழங்கப்பட்டது. தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய் நிலையினால் ஏற்படுத்தப்பட்டுள்ள குறுகிய கால சவால்களுக்கு கவனம் செலுத்துவதன் மூலம் கிராமிய மக்களின் சிதைக்கப்பட்டுள்ள வாழ்வாதாரங்களை புத்துயிர் அளித்து கிராமிய உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதனூடாகத் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே இவ்வேலைத்திட்டத்தின் முதன்மையான தேவையாகும்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.எம். நௌஷாட்,  பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யூ. எம். அஸ்லம், கணக்காளர் ஐ.எம். பாரீஸ், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் யூ.எல். எம். சலீம், கிராம நிலதாரி நிருவாக உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts