உள்நாடு | சமூக வாழ்வு | 2021-11-25 16:56:48

கிண்ணியா, இறக்காமத்திலும் கொரோனா உடல்களை அடக்க அனுமதியுங்கள்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடலங்களை கிண்ணியா, இறக்காமம் போன்ற இடங்களிலும் அடக்கம் செய்ய அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தென்கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதாக மன்றத்தின் செயலாளர் ஏ.எம்.ஆஷிப் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்ட துரதிஷ்டமான நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களையடுத்து, இவ்வாறான ஜனாஸாக்களை அடக்குவதற்காக அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதுடன் அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, மஜ்மா நகர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அன்று தொடக்கம் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் மாத்திரமல்லாமல் இந்து, பௌத்தர், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து இனத்தவரினதும் உடல்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை அங்கு சுமார் 3300 இற்கு மேற்பட்ட உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் அங்கு இன்னும் சுமார் 100 உடல்கள் வரையே அடக்கம் செய்ய முடியும் எனவும் ஓட்டமாவடி பிரதேச சபை அறிவித்துள்ளது.

ஆகையினால் ஏற்கனவே கொவிட் ஜனாஸாக்களை அடக்குவதற்காக தெரிவு செய்யப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டுள்ள திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா மற்றும் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் போன்ற இடங்களிலும் அடக்கம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் ஏனைய மாகாணங்களிலும் மாவட்டம் தோறும் இதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அக்கடிதங்களில் வலியுறுத்திக் கேட்டுள்ளோம்- என்று மேலும் குறிப்பிட்டார்.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts